

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
புது டெல்லி: மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் வரும் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் நிற்கும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் வரும் குறைபாடுள்ள தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மூலம் நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் அனுமதிக்காது. நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம். நமது ஜனநாயகத்தின் மீதான இந்த வஞ்சகத் தாக்குதலை எங்களின் முழு பலத்துடன் எதிர்த்துப் போராடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. அப்போது தொகுதி மறுவரையறை, மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாக்களை மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த எம்.பி கே.சி. வேணுகோபால், “இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. மத்திய அரசு தற்போது எடுத்து வரும் நடவடிக்கை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை மீதான தாக்குதல். மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 2023-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது மத்திய அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த பிறகே தொகுதி மறு சீரமைப்பு மேற்கொள்ளப்படும். அதன் பிறகே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தது. அவ்வாறு இருக்க, இப்போது எதற்கு தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள மத்திய அரசு முயல்கிறது” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அதை எதிர்ப்பதாக இருந்தால் பிரிவு 72-ன் கீழ் தொழில்நுட்ப காரணங்களுக்காக மட்டுமே எதிர்க்க முடியும். தொழில்நுட்ப பிரச்சினை ஏதும் இல்லாத நிலையில் மசோதா தாக்கல் செய்வதை எதிர்க்க முடியாது” என கூறினார்.
தொடர்ந்து மசோதாவை அறிமுகம் செய்ய அவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதா அறிமுகத்துக்கு ஆதரவாக 207 எம்பிக்கள் வாக்களித்தனர். எதிராக 126 எம்பிக்கள் வாக்களித்தனர். இதன்மூலம், மசோதாவை அறிமுகம் செய்வதற்கு அதிக ஆதரவு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த மசோதாக்கள் மீது பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றவிருக்கிறார்.