மும்பை: மும்பை மாநகராட்சி (பிஎம்சி) தேர்தலில் பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிகளின் இடப் பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், மஹாராஷ்டிரா தேர்தலில் பல கட்சிகளும் கூட்டணியை வேகமாக இறுதி செய்துவருகிறது.
நாட்டின் செல்வசெழிப்பான மாநகராட்சியான மும்பைக்கு ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக, மொத்தமுள்ள 227 வார்டுகளில் 200 வார்டுகளில் ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் இறுதி உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக, சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான என்சிபி ஆகிய கட்சிகளைக் கொண்ட மகாராஷ்டிராவின் ஆளும் கூட்டணியான 'மகா யுதி'யின் மற்றொரு கூட்டம் தானேவில் உள்ள ஏக்நாத் ஷிண்டேவின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. நள்ளிரவு வரை நீடித்த இந்தக் கூட்டத்தில் தானே, கல்யாண்-டோம்பிவலி மற்றும் நவி மும்பை உள்ளாட்சித் தேர்தல்களுக்கான கூட்டணி உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
மும்பையில், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்ததால், சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியுடனான கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ் கட்சி, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி (விபிஏ) கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பிஎம்சி தேர்தலுக்காக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சி, எம்என்எஸ் மற்றும் என்சிபி (சரத் பவார்) கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் என்று அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் உறுதிப்படுத்தியுள்ளார்.
மும்பை தேர்தலில் சரத் பவார் தலைமையிலான என்சிபி மற்றும் அஜித் பவாரின் தலைமையிலான என்சிபி ஆகியவை கூட்டணி அமைக்க இருந்தது. இந்த தேர்தலில் சரத் பவாரின் கட்சிக்கு வெறும் 35 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் பேச்சுவார்த்தைகள் நின்று போனது. இருப்பினும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்காக, சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கும், அஜித் பவாருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது.