புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசை கவிழ்க்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சதி செய்வதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. அவர் வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் செயல்படுவதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் ஆலோசனைக் குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஓராண்டுக்குள் கவிழும் என்று பேசியதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் சதித் திட்டம் அம்பலமாகிவிட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஊடக செய்தியை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தி மொழியில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ராகுல் காந்தியின் இந்த கருத்து காங்கிரஸ், பல எதிர்க்கட்சிகள் மற்றும் ‘டூல்கிட் கும்பல்' (toolkit gang) ஆகியவை இணைந்து இந்தியாவை நிலைகுலையச் செய்ய நினைக்கும் ஒரு பெரிய சதியை சுட்டிக்காட்டுகிறது. இது ஒரு சாதாரண கருத்து அல்ல. மாறாக, நாட்டில் அராஜகத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கடுமையான சதியாகும்.
தேர்தல் களத்தில் காங்கிரஸால் பாஜகவைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், மக்கள் பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதால் மோடி அரசை அகற்ற முடியாது என்பதையும் உணர்ந்துகொண்ட ராகுல் காந்தியும் அவரது கூட்டாளிகளும் நாடு முழுவதும் வன்முறையைத் தூண்ட முயற்சிக்கின்றனர். இந்தியா மீதான அவர்களின் வெறுப்பு மிகவும் ஆழமானது. நாட்டில் எந்தவொரு நேர்மறையான விஷயங்கள் நடப்பதையும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
இந்த நாட்டு மக்கள் விவேகமானவர்கள். ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகள் மற்றும் நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படும் டூல்கிட் கும்பலின் உண்மையான தன்மையை அவர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளனர். மக்கள் அவ்வப்போது இத்தகைய சக்திகளுக்கு வலுவான பதிலடி கொடுத்துள்ளனர். இந்தியாவுக்கு தீ வைக்க நினைக்கும் ‘இன்டி’ கூட்டணியின் சதி ஒரு போதும் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா வெளியிட்ட வீடியோ செய்தியில், “நாட்டில் கலவரங்களைத் தூண்டி, அராஜகத்தின் மூலம் மோடி அரசை வீழ்த்த ராகுல் காந்தி முயற்சிக்கிறார்.
இந்தியாவில் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஜார்ஜ் சோரஸ் போன்ற தனது எஜமானர்கள் மற்றும் அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கு நிதியளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் தூண்டுதலின் பேரில், ராகுல் காந்தி ஒரு வெளிநாட்டு திட்டத்தை செயல்படுத்துகிறார் என்பதை அவரது கருத்துகள் திட்டவட்டமாக தெளிவுபடுத்துகின்றன. மோடி அரசுக்கு மக்களின் ஆசி இருக்கும் வரை, அது நாட்டுக்கு தொடர்ந்து சேவை செய்யும்’’ என கூறியுள்ளார்.