இந்தியா

“நாட்டின் சுதந்திரத்துக்காக பாஜக, ஆர்எஸ்எஸ் எதுவும் செய்யவில்லை” - கார்கே

மோகன் கணபதி

ஹல்த்வானி (உத்தராகண்ட்): நாட்டின் விடுதலைக்காக பாஜகவோ, ஆர்எஸ்எஸ் அமைப்போ எதையும் செய்யவில்லை என்றும், ஆனால் அவர்கள்தான் தேசபக்தி பற்றி தொடர்ந்து உபதேசம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தராகண்ட்டின் ஹல்த்வானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இன்றைய தினம் ஒரு புனிதமான நாள். 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி இந்த நாளில்தான் மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார். செய் அல்லது செத்துமடி என்று அவர் அறைகூவல் விடுத்தார்.

இதன் காரணமாகவே நாட்டு மக்கள் ஒன்று திரண்டார்கள். நாட்டை ஆண்ட வெள்ளையர்கள் அச்சத்துக்கு உள்ளானார்கள். முடிவில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இதில், மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் அதே நாளில் இதே இடத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெற்றது.

உத்தராகண்ட் தேவபூமி என்று அழைக்கப்படுகிறது. இது வீரத்துக்கும் தியாகத்துக்கும் பெயர்பெற்ற நிலமும்கூட. நமது ராணுவத்தில் உள்ள குமோன் ரெஜிமெண்ட், கார்வால் ரெஜிமெண்ட் குறித்து முழு நாடும் நன்கு அறியும். நாட்டின் முதல் பரம்வீர் சக்ரா விருது பெற்றவர் இந்த மண்ணின் மைந்தர்தான். எனவே, நாட்டைக் காப்பவர்கள் நாங்களே என நீங்கள் பெருமையுடன் கூறிக்கொள்ளலாம்.

பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நாட்டுக்காக எதையும் செய்ததில்லை. நாட்டின் சுதந்திரத்துக்கு அவர்களின் பங்களிப்பு எதுவுமில்லை. நாட்டின் சுதந்திரத்துக்காக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவராவது சிறை சென்றிருக்கிறாரா? பாஜக ஆதரவாளர்கள் ஒருவராவது சிறை சென்றிருக்கிறார்களா? ஒரு சிலர் சிறை சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அங்கு செல்வதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள். இதுதான் வரலாறு. இருந்தும் அவர்கள் தேசபக்தி குறித்து தொடர்ந்து உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மை என்னவென்றால், நாம்தான் உண்மையான தேசபக்தர்கள். அவர்கள் கட்சி மாறியவர்கள். எனவேதான் காங்கிரஸ் கட்சியை; காங்கிரஸ் கட்சியினரை யாராலும் அச்சுறுத்த முடிவதில்லை. உத்தராகண்ட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி விரைவில் அமையும்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT