“2029-ல் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த தொகுதி மறுவரையறை அவசியம்” - ராகுலுக்கு ரிஜிஜு பதில்

“2029-ல் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த தொகுதி மறுவரையறை அவசியம்” - ராகுலுக்கு ரிஜிஜு பதில்
Updated on
2 min read

புதுடெல்லி: 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த தொகுதி மறுவரையறை அவசியம் என்று ராகுல் காந்திக்கு, கிரண் ரிஜிஜு பதலளித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் அளித்துள்ள பதிலில், “மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் மகளிருக்கான இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டம் 2023-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு (ராகுல் காந்திக்கு) நன்றாகவே தெரியும்.

மகளிர் இடஒதுக்கீடு பின்வரும் சூழல்களில் நடைமுறைக்கு வரும்.

1. தொகுதி மறுவரையறை பணி மேற்கொள்ளப்பட்ட பிறகு.

2. 2023-ம் ஆண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில். (அதாவது 2026-ம் ஆண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் தரவுகள்)

2026-ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளை வெளியிடுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இருப்பினும், சாதிவாரியான கணக்கெடுப்பு போன்ற காரணங்களால் இவை இறுதியாக வெளியிடப்பட கணிசமான காலம் ஆகலாம்.

இதைக் கருத்தில் கொள்ளும்போது, மகளிருக்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதில் பெரும் தாமதம் ஏற்படாம். குறைந்தது 2034 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இது சாத்தியப்படாமல் போகலாம்.

எனவே, 2029-ல் நடைபெற உள்ள அடுத்த பொதுத் தேர்தலில் மகளிருக்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டுமானால், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் தொகுதி மறுவரையறைப் பணியை மிக விரைவில் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அரசியலமைப்புத் திருத்தங்களுடன் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா 2026-ன் கீழ், இதற்கான அமலாக்க வழிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இருப்பினும், இதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு திருத்த மசோதா 2026 தோல்வி அடைந்துள்ளது. எனவே, 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தொகுதி மறுவரையறை அவசியம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார் தலைமையிலான அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை. இது 33% மகளிர் இடஒதுக்கீடு குறித்த காங்கிரஸின் நிலைப்பாட்டின் மீது தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னணி:

பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி நேற்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், “இந்திய பெண்களின் ஆற்றல் முடக்கப்பட்டுள்ளது. அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. கனவு காணவும் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத ஒரு நாடு நிச்சயம் வெற்றி பெற முடியாது” என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

அவரது இந்த வீடியோவை டேக் செய்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று காலை வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இது காங்கிரஸ் கட்சியிடமிருந்து வரும் ஒரு நேர்மறையான செய்தியாகத் தெரிகிறது. பெண்கள் விஷயத்தில் ராகுல் காந்தியின் மனநிலையில் ஒரு தெளிவான மாற்றம் தெரிகிறது. இனி, காங்கிரஸ் கட்சி மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிபந்தனையின்றி ஆதரிக்கும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

கிரண் ரிஜிஜுவின் இந்தப் பதிவுக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா 2023 காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஏற்கெனவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பது நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருக்கும் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

கேள்வி என்னவென்றால், மூன்று ஆண்டுகள் கடந்தும் அது ஏன் இன்னும் அமல்படுத்தப்படவில்லை? இப்போது ஏன் அதை தேவையற்ற வகையில் தொகுதி மறுவரையறையுடன் இணைக்க விரும்புகிறீர்கள்? 2023-ம் ஆண்டு சட்டத்தை அமல்படுத்துங்கள். எந்த நிபந்தனையும் இன்றி” எனத் தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பதிவை டேக் செய்து கிரண் ரிஜிஜு மேற்கண்ட பதிலை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“2029-ல் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த தொகுதி மறுவரையறை அவசியம்” - ராகுலுக்கு ரிஜிஜு பதில்
ஜார்க்கண்ட்டில் 15-வது நாளாக மாணவர்கள் போராட்டம் - அரசு நடத்திய பேச்சுவார்த்தை என்ன ஆனது?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in