புதுடெல்லி: உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கட்சியான பாஜக, கடந்த 2024-25 நிதியாண்டில் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்தில் கடந்த 8-ம் தேதி தாக்கல் செய்தது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள அதில், ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பெற்ற நன்கொடை விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்:
2024-25 நிதியாண்டில் மொத்தம் ரூ.6,654.95 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. இது 2023-24 நிதியாண்டில் பெற்ற ரூ.3,967 கோடியைவிட 68% அதிகம். 2024-25 காலகட்டத்தில் மக்களவைத் தேர்தலும் ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட சில மாநில பேரவைத் தேர்தலும் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக பெற்ற நன்கொடையில் அதிகபட்சமாக புருடென்ட் தேர்தல் அறக்கட்டளை மட்டும் ரூ.2,180 கோடி வழங்கி உள்ளது. புரோகிரஸிவ் அறக்கட்டளை ரூ.757 கோடி, நியூ டெமாக்ரட்டிக் அறக்கட்டளை ரூ.150 கோடி நன்கொடை வழங்கி உள்ளன. மற்ற தேர்தல் அறக்கட்டளைகள் ரூ.3,112.5 கோடி வழங்கி உள்ளன. இதுதவிர, நிறுவனங்கள், தனிநபர்களிடமிருந்தும் பாஜக நன்கொடை பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி கடந்த நிதியாண்டில் வெறும் ரூ.522.13 கோடி மட்டுமே நன்கொடையாக பெற்றுள்ளது. இது முந்தைய (2023-24) நிதியாண்டின் ரூ.1,129 கோடியைவிட 43% குறைவு. அத்துடன் பாஜகவின் நன்கொடையுடன் ஒப்பிடும்போது, 12 மடங்கு குறைவு.
தேர்தல் அறக்கட்டளைகள் மட்டுமல்லாது தேர்தல் பத்திரங்கள் மூலமும் நன்கொடை பெறும் முறை கடந்த 2018 முதல் அமலில் இருந்தது. வெளிப்படைத்தன்மை இல்லாத இந்த முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த நிதியாண்டில் எந்த அரசியல் கட்சியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறவில்லை.