ராம்ராவ் வட்குடே

 
இந்தியா

மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக ராஜ்யசபா எம்.பி ராம்ராவ் வட்குடே காலமானார்

வெற்றி மயிலோன்

புது டெல்லி: மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராம்ராவ் சகாராம் வட்குடே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 72.

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராம்ராவ் சகாராம் வட்குடே, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்குடே, இதற்கு முன்பு ஜூன் 2014 முதல் அக்டோபர் 2019 வரை மகாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றினார்.

இருமல் காரணமாக, நவம்பர் 20 அன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வட்குடே அனுமதிக்கப்பட்டிருந்தார். சனிக்கிழமை மாலை 6 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரவு 11.45 மணியளவில் அவர் உயிரிழந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். வட்குடே மகாராஷ்டிராவின் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள பர்பானியைச் சேர்ந்தவர்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அடித்தட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட, எளிமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள ஒரு அரசியல் ஆளுமையை நாடு இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஹிங்கோலி மாவட்ட பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த வட்குடே, தங்கர் சமூகத்தின் மேம்பாட்டிற்காகப் பெருமளவு பணியாற்றியதாக பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மேலும், அவர் 'செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு மேம்பாட்டுக் கழகத்தின்' தலைவராக பணியாற்றியதுடன், கூட்டுறவுத் துறையிலும் தனது முத்திரையைப் பதித்திருந்தார் என்று முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT