

பாலாகாட்: மத்தியப் பிரதேசத்தின் பாலாகாட் மாவட்டத்தில் நடைபெற்ற கிராமத் திருவிழா ஒன்றில் சௌமீன் எனப்படும் நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 12 பெரியவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாலாகாட் மாவட்டத்தில் கிரனாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ‘ஹிரி’ கிராமத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற திருவிழாவின் போது, சௌமீன் எனப்படும் நூடுல்ஸ் சாப்பிட்ட பலருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக பாலாகாட் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா சிங் தெரிவித்தார்.
முதலில் 118 குழந்தைகள் கிரனாபூரில் உள்ள சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் 45 பேர் உயர்சிகிச்சைக்காக பாலாகாட் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீதமுள்ள 73 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர்கள் வீடு திரும்பினர். குழந்தைகளைத் தவிர, 12 பெரியவர்களும் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
மருத்துவமனைக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் ஆதித்யா சிங், நோயாளிகளின் உடல்நிலை குறித்து விசாரித்ததுடன், அவர்களுக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
பாலாகாட் மாவட்டத்தின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி சத்ருகன் சிங் தஹியா கூறுகையில், குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்ட 45 குழந்தைகளும், பொது வார்டில் அனுமதிக்கப்பட்ட 12 பெரியவர்களும் தற்போது நலமாக உள்ளனர் என்றார். மேலும் அவர், “அனைத்து நோயாளிகளும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டனர். மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.