பெர்லினில் ராகுல் காந்தி
பெர்லின்: ஜெர்மனி சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதன் தலைநகர் பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் பேசுகையில், பாஜக இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த முயற்சிப்பதாகக் கூறியது சர்ச்சையாகியுள்ளது.
பெர்லின் நகரின் ஹெர்டி பள்ளியில், மாணவர்கள் மத்தியில் சுமார் 1 மணி நேரம் ராகுல் காந்தி பேசிய வீடியோவை காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரபூர்வ சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளது.
அந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசியதாவது: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய ஜனநாயகம் இந்த உலகுக்கே ஒரு சொத்து எனலாம். அப்படியிருக்க இந்திய ஜனநாயக அமைப்பு மீதான தாக்குதல் சர்வதேச ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்.
பாஜக அடிப்படையில் என்ன செய்ய விழைகிறது என்றால், இந்திய அரசமைப்பை முற்றிலுமாக அப்புறப்படுத்த முயற்சிக்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான சமத்துவத்தை அழிக்க நினைக்கிறது. மொழிகள், மதங்களுக்கு இடையேயான சமத்துவத்தை ஒழிக்க நினைக்கிறது; இந்திய அரசமைப்பின் மையப் புள்ளியை சிதைக்க நினைக்கிறது.
ஜனநாயக அமைப்பின் மீது தாக்குதல் நடைபெறும்போது எதிர்க்கட்சிகள், தேர்தலில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்று சொல்வதோடு நிறுத்திவிடாமல், அதை எதிர்க்க சில வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.
அந்தவகையில், ஜனநாயக அமைப்பை தாக்குவோரை நாங்கள் எதிர்கொள்வோம். அதற்காக ஒரு வழியை நாங்கள் உருவாக்குவோம். எதிர்க்கட்சிகளின் இந்த உத்தி நிச்சயம் வெற்றி பெறும். நாங்கள் பாஜகவுக்கு எதிராகப் போராடவில்லை; நாங்கள் இந்தியாவின் கட்டமைப்பை கைப்பற்றும் அவர்களின் போக்கை மட்டுமே எதிர்க்கிறோம்.
அடிப்படையில், இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளில் சிக்கல் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இரண்டாவதாக, அரசு கட்டமைப்பு ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறுகிறோம். அரசு கட்டமைப்புகளை ஆயுதமாக்கும் முயற்சி நடக்கிறது. இதனால், அரசு கட்டமைப்புகள் என்ன மாதிரியான பணிகளைச் செய்ய வேண்டுமோ அவைகளால் அதைச் செய்ய இயலவில்லை.
ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை கட்டமைக்க போராடிக் கொண்டிருந்த வேளையில், 1947-ல் இந்தியா தனது அரசமைப்பின் அடிப்படையில் பொருளாதார, அரசியல் ஒன்றியத்தை கட்டமைத்திருந்தது.
அதனால், நீங்கள் எப்போது இந்த புவியின் ஜனநாயக நாடு பற்றிப் பேசினாலும் சரி, இந்த உலகின் மிகப்பெரிய, பல்வேறு விஷயங்களையும் உள்ளடக்கிய இந்திய ஜனநாயகத்தைப் புறந்தள்ளிவிட்டுப் பேச முடியாது. இந்திய ஜனநாயகம் வெறும் இந்தியாவின் சொத்து மட்டுமல்ல; அது உலகின் சொத்து. அதனால் தான், இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், உலக ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என நான் கூறுகிறேன்.
ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல்கள் நியாயமாக நடந்ததாக நான் உணரவில்லை. சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை காங்கிரஸ் உருவாக்கியது. அதற்காக அவற்றை தன்னுடைய ஏவலுக்கானது என்று கருதவில்லை. அந்த அமைப்புகள் தேசத்துக்கானவை என்பதை உணர்ந்திருக்கிறது. ஆனால், பாஜக அந்த அமைப்புகளை தனது சொந்த அமைப்புகளாகப் பார்க்கிறது. அதனால் தான் அவற்றைக் கொண்டு தங்கள் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்த முயற்சிக்கின்றது. சிபிஐ, அமலாக்கத் துறை அரசு ஆயுதங்களாகிவிட்டன. அவை குறிவைக்கும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியினர் எண்ணிக்கையைக் கொண்டே அதை உறுதிப்படுத்திவிடலாம். இந்த அமைப்புகளின் வழக்குகள் எல்லாமே அரசியல் சாயம் கொண்டவையாக உள்ளன. அதுமட்டுமல்லாது இந்தியப் பொருளாதாரத்தை சிக்கலான நிலைக்குத் தள்ளியுள்ளனர்.
இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியும் ஆர்எஸ்எஸ்ஸின் அடிப்படை சித்தாந்தத்தை எதிர்க்கிறது. அதில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுக்குள் சில போட்டிகள் உள்ளன. அது தொடர்ந்துகொண்டு தான் இருக்கும். ஆனால் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையைக் காட்டவேண்டிய நேரம் வரும்போது, நீங்கள் நாடாளுமன்றத்தில் பார்த்ததுபோல் அதை வெளிப்படுத்துவோம். நாங்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறோம், பாஜகவை ஒற்றுமையுடன் எதிர்ப்போம். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.