புதுடெல்லி: மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த முதல்வர் நிதிஷ் குமார், பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் உட்பட 5 பேர் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர். ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் ஏ.டி.சிங் தோல்வி அடைந்தார்.
நாடு முழுவதும் 10 மாநிலங்களை சேர்ந்த 37 மாநிலங்களவை எம்.பி. பதவியிடங்கள் ஏப்ரலில் நிறைவடைகின்றன. இந்த பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. தமிழகம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், அசாம், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 26 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பிஹார் 5, ஒடிசா 4, ஹரியானா 2 ஆகிய மாநிலங்களின் 11 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு 14 பேர் போட்டியிட்டனர். இதைத் தொடர்ந்து 3 மாநிலங்களிலும் நேற்று தேர்தல் நடைபெற்றது.
பிஹாரில் பாஜக வெற்றி: பிஹாரின் 5 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் உட்பட 5 பேர் போட்டியிட்டனர். இதில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த முதல்வர் நிதிஷ் குமார், பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் தலா 44 வாக்குகள், ராம்நாத் தாக்குர், உபேந்திர குஷ்வாகா தலா 42 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர்.
ஐந்தாவது எம்.பி. பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த ஷிவேஷ் ராம், ராஷ்டிரிய ஜனதா தளத்தை (ஆர்ஜேடி) சேர்ந்த ஏ.டி சிங் இடையே கடும் போட்டி நிலவியது. நிறைவாக, ஷிவேஷ் ராம் 41 வாக்குகளை பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆர்ஜேடி வேட்பாளர் ஏ.டி.சிங்குக்கு 37 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. எதிரணியான மகாபந்தன் கூட்டணியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால், 5 எம்.பி. பதவியையும்பாஜக எளிதாக கைப்பற்றியது.
ஒடிசாவில் 2 பாஜக எம்பிக்கள்: ஒடிசாவில் 4 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. குதிரை பேரம் அச்சத்தால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பிஜு ஜனதா தள எம்எல்ஏக்கள் தனியார் சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று நடந்த தேர்தலில் பாஜகவை சேர்ந்த மன்மோகன் சமல், சுஜித் குமார், திலீப் ரே வெற்றி பெற்றனர்.
பிஜு ஜனதா தளத்தின் சான்ட்ரப்ட் மிஸ்ரா மட்டுமே வெற்றி பெற்றார். அக்கட்சியின் மற்றொருவேட்பாளர் தத்தேஸ்வர் ஹோடாதோல்வியடைந்தார். ஹரியானாவில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஒரு பாஜக எம்எல்ஏவின் வாக்கு தொடர்பாக ஆட்சேபம் எழுந்ததால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.