புதுடெல்லி: பாஜக தேசிய வரலாற்றில் இளம் தலைவராக தேர்வாகி உள்ளார் நிதின் நவீன் (45). அவரது இளமை ஒரு சவாலாகவும், அதே சமயம் ஒரு வாய்ப்பாகவும் உள்ளது.
அடுத்து வரவிருக்கும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அவருக்கு பெரும் சவாலாகி நிற்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் தேர்தலை சந்திக்கும் நிலையில் அசாம், புதுச்சேரியை தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லை.
மேற்கு வங்கத்தில் பாஜக பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும், முதல்வர் மம்தாவின் வலுவான பிடியும், அவரது திரிணமூல் கட்சியின் அடிமட்ட பலமும் பாஜகவுக்கு தடைகளை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் திராவிட இயக்கம், மொழி மற்றும் சமூக நீதி அரசியல் ஆகியவை பாஜகவின் பாதையை கடினமாக்கியுள்ளன. தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு பெயரளவில் பதவி அளித்து விட்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதில்லை என்ற புகார்களை நிதின் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கேரளாவில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்து கின்றன. கேரளாவில் சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களில் கிடைத்த சில வெற்றிகள் பாஜகவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. அதேசமயம், வட இந்தியாவின் அரசியல் சூத்திரம் தென்னிந்தியாவில் வேலை செய்யாது என்பதை பாஜகவுக்கு உணரவைப்பது நிதினுக்கு உள்ள முக்கிய சவாலாகும்.
பாஜக நீண்ட காலமாக மத்தியில் ஆட்சியில் உள்ளது. இதன் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு முக்கிய இடம் பெற்றுள்ளது. இதை மாற்றி கட்சிக்கு தனித்துவமான அடையாளத்தை நிறுவும் சவாலும் நிதின் முன் நிற்கிறது. கட்சி பலவீனமடைந்தால், பிரதமர் மோடியின் செல்வாக்கை மட்டுமே பாஜக சார்ந்து இருக்க வேண்டியிருக்கும். இது கட்சிக்கு தீங்கு விளைவிக்கும்.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இடையே ஒருங்கிணைப்பு பலவீனமடையும் போதெல்லாம், கட்சியின் அடிமட்ட பலம் பாதிக்கப்படுவது வழக்கம். இதனால் பாஜக - ஆர்எஸ்எஸ் இடையே ஒருங்கிணைப்பு சீராக இருப்பதை உறுதி செய்வதும் நிதினுக்கு சவால்தான். பாஜக தனியாக அல்லாமல், என்டிஏ கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல்களில் போட்டியிடுகிறது. பாஜகவின் தேசிய வெற்றிக்கு என்டிஏ ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணிக் கட்சிகளுக்கு தங்களின் சொந்த அரசியல் முன்னுரிமைகளும் லட்சியங்களும் உள்ளன. தொகுதிப் பங்கீடு, தலைமைப் பிரச்சினை மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் தொடர்பாக கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. இதனிடையே கூட்டணிக் கொள்கைகளைக் கடைப்பிடித்து, பாஜகவின் நலன்களையும் பாதுகாப்பது நிதினுக்கு சவாலாகவே இருக்கும்.
கட்சியின் அனைத்து வகுப்பினருக்கும் உண்மையான பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை பாஜகவில் அதிகரித்து வருகிறது. எனவே, இதைப் பேணிக்காப்பதில் தலைவர் நிதின் ஆற்றல் மிகுந்தவராக இருப்பது முக்கியம்.
தொகுதி மறுவரையறை, ஒரே நாடு, ஒரே தேர்தல் போன்ற பிரச்சினைகள் அரசியல் ரீதியாக உணர்வுப் பூர்வமானவை. இந்த விஷயங்கள் தவறாகக் கையாளப்பட்டால், அவை பிராந்திய அதிருப்தியையும் அரசியல் எதிர்ப்பையும் தூண்டிவிடும் ஆபத்து உள்ளது. இதை எதிர்கொள்வதும் நிதினுக்கு சவாலாகாவே அமையும்.