அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர்
பெங்களூரு: கர்நாடகாவில் ரூ.6,000 கோடி ஊழலில் ஈடுபட்ட அமைச்சர் ராஜினாமா செய்யக்கோரி பாஜக, மஜத எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கர்நாடக மாநில மது விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் குருசுவாமி அண்மையில் கூறும்போது, ”கர்நாடக கலால் துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர் அதிகாரிகளின் இடமாற்றம், மதுக்கடை உரிமங்கள் வழங்குதல், உரிமம் புதுப்பித்தல் ஆகியவற்றில் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குகிறார்.
பெங்களூருவில் புதிதாக திறக்கப்பட்ட சி.எல். 7 பார் உரிமம் வழங்குவதற்கு ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் லஞ்சம் வாங்கியுள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு கலால் துறையில் ஊழல் நடந்துள்ளது” என புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர், பேரவையில் கோரிக்கை விடுத்தனர். அதனை பேரவைத் தலைவர் யூ.டி.காதர் ஏற்க மறுத்ததால், பாஜகவினர் கடந்த சில தினங்களாக அவையில் அமளியில் ஈடுபட்டனர். மேலும் பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் மற்றும் மஜத எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் செவ்வாய்க்கிழமை இரவு பேரவையில் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவையின் மையத்தில் குவிந்த எம்எல்ஏக்கள், கலால்துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பினர். இரவு முழுவதும் அவையில் படுத்து உறங்கி, காலையில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
ராஜினாமா செய்ய மறுப்பு: அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர் கூறும்போது, ”இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை. சிலர் என் மீது பொய்யான புகாரை கூறி வருகின்றனர். இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். நான் தவறு செய்யாததால், எனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்” என்றார்.
கலால்துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர் மீதான ஊழல் புகாரால் முதல்வர் சித்தராமையாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.