மஞ்சுஷா நாக்புரே

 
இந்தியா

புனே மேயரானார் பாஜகவின் மஞ்சுஷா நாக்புரே: கடைசி நேரத்தில் பின்வாங்கிய என்சிபி, காங்கிரஸ்!

வெற்றி மயிலோன்

புனே: என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, பாஜக கவுன்சிலர் மஞ்சுஷா நாக்புரே புனே மேயராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வரும், புனே மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான அஜித் பவார் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், புனே எம்.பியுமான சுரேஷ் கல்மாடி ஆகியோருக்கு இரங்கல் கூட்டம் நடத்தி மரியாதை செலுத்தும் விதமாக, அரசியல் கட்சிகள் போட்டியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று புனே மாநகராட்சி பாஜக குழுத் தலைவர் கணேஷ் பிட்கர் விடுத்த வேண்டுகோளை அடுத்து, என்சிபியைச் சேர்ந்த ஷீத்தல் சாவந்த் மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த அஸ்வினி லாண்ட்கே ஆகியோர் தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர்.

          

சமீபத்தில் நடந்து முடிந்த புனே மாநகராட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்திய குடியரசுக் கட்சி (அதாவலே) தலைவர் பர்சுராம் வடேகர் புனே துணை மேயராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யார் இந்த மஞ்சுஷா நாக்புரே? - தீவிர ஆர்எஸ்எஸ் ஆதரவு குடும்பத்தைச் சேர்ந்தவரும், எம்பிஏ பட்டம் பெற்றவருமான 46 வயதான நாக்புரே, மூன்றாவது முறையாக கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சமீபத்தில் நடைபெற்ற புனே மாநகராட்சித் தேர்தலில் இவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாக்புரே முதன்முதலில் 2012-ல் சிம்மகட் சாலையில் உள்ள ஆனந்தநகர் பகுதியிலிருந்து புனே மாநகராட்சிக்கு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2026 மாநகராட்சித் தேர்தலில், அவர் சிம்மகட் சாலையில் உள்ள சன்சிட்டி-மாணிக்பாக் வார்டில் இருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நான்கு முறை கவுன்சிலராக இருந்த வர்ஷா தப்கிர் மற்றும் மூன்று முறை கவுன்சிலராக இருந்த மான்சி தேஷ்பாண்டே ஆகியோர் பாஜக சார்பில் மேயராக முயற்சித்த நிலையில் நாக்புரே தேர்ந்தெடுக்கப்பட்டார். நாக்புரே பிரதிநிதித்துவப்படுத்தும் வார்டு, என்சிபி (எஸ்பி) செயல் தலைவர் சுப்ரியா சுலேவின் பாராமதி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இத்தொகுதியை வெல்ல பாஜக கடுமையாக முயற்சி செய்து வருகிறது. நாக்புரேயின் கணவர் தீபக்கும் பாஜக கட்சிப் பொறுப்பாளராக உள்ளார். இந்த தம்பதியினர் ஒரு வணிக நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். நாக்புரேவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 3.22 கோடி ஆகும்.

SCROLL FOR NEXT