கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஏப் 23, 29-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார்.
அப்போது மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: மேற்கு வங்கத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்படும். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்த 6 மாதங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். கடந்த 15 ஆண்டுகள் மேற்கு வங்க மக்களுக்கு இருண்ட காலமாகவே இருந்திருக்கிறது.
மேற்கு வங்க மாநில மக்கள் முதல்வர் மம்தா பானர்ஜி மீது வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றவில்லை. பாஜக எவ்வாறு மேற்கு வங்கத்தை கட்டமைக்க போகிறது என்பதற்கான செயல்திட்டம் தான் இந்த தேர்தல் அறிக்கை. இவ்வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள்: 15 ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியின் ஊழலைஅம்பலப்படுத்தும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
பாஜக ஆட்சிக்கு வந்த ஆறு மாத காலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். மாதந்தோறும் பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ஊடுருவல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை கடத்தலைத் தடுக்க கடுமையான சட்டம் இயற்றப்படும்.
ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) வழங்கப்படும். 7வது ஊதியக் குழு அமல்படுத்தப்படும். ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள், சுயதொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். வேலையற்ற இளைஞர்களுக்கு ரூ.3,000 நிதி உதவி வழங்கப்படும். இதுபோன்ற பல திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.