ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: “எனது தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக, எங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்கு ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வரையில் கொடுப்பதாகவும், அமைச்சர் பதவிகள் மற்றும் மாநில அந்தஸ்து வழங்குவதாகவும் பாஜக பேரம் பேசுகிறது” என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்ரீநகரின் ஹஸ்ரத்பாலில் நடைபெற்ற தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அப்துல்லா, “தேசிய மாநாட்டுக் கட்சியைப் பிளவுபடுத்த பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. ஜம்முவைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் என்னிடம் வந்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருக்கும் பாஜக நிர்வாகி ஒருவர், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டு, ரூ.20-30 கோடி, அமைச்சர் பதவி மற்றும் மாநில அந்தஸ்து ஆகியவற்றை வழங்குவதாக உறுதியளித்ததாகக் கூறினார். மக்களின் நம்பிக்கை மிகவும் பலவீனமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
பணம் மற்றும் அமைச்சர் பதவிகளை வழங்குவது பலனளிக்காத நிலையில், இப்போது எங்கள் எம்.எல்.ஏ.க்களிடம் ரகசியமாக, 'எங்களுடன் வாருங்கள், நாங்கள் உங்களுக்கு மாநில அந்தஸ்தை பெற்றுத் தருகிறோம்' என்று கூறி வருகிறார்கள். ஆனால், எனது எம்எல்ஏக்கள் விலைபோக மாட்டார்கள். இந்த மேடையில் உள்ள எந்தவொரு எம்எல்ஏவும் 30 கோடி ரூபாய்க்கோ அல்லது 100 கோடி ரூபாய்க்கோ தங்கள் நேர்மையை விற்க மாட்டார்கள். ஏனெனில், நாங்கள் இறைவனுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்துவிடலாம் என்று நினைக்கும் அளவுக்கு நாங்கள் பலவீனமானவர்கள் அல்ல. பின்வாசல் வழியாக வந்து உங்களால் ஒருபோதும் முன்வரிசை அதிகாரத்தை அடைய முடியாது. மக்கள் உங்களைப் பின்வரிசையிலேயே வைத்துள்ளனர், அங்கேயேதான் நீங்கள் நீடிப்பீர்கள்” என்றார்.