புதுடெல்லி: சீக்கிய மதுகுருமார்கள் படத்தின் மீது மது தெளித்தல் உள்ளிட்ட அவமதிப்பு செயல்களில் ஈடுபட்டது தொடர்பான வீடியோவில் இருப்பது முதல்வர் பகந்த் மான்தான் என்பது உறுதியாகி இருப்பதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
சீக்கிய மதகுருமார்களின் படங்கள் மீது மதுவை தெளிப்பது உள்ளிட்ட அவமதிப்பு செயல்களில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமீபத்தில் வைரலானது. இது பஞ்சாபில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என்றும் அது போலியானது என்றும் பகவந்த் மான் மறுப்பு தெரிவித்தார். அத்தகைய செயல்களில் ஈடுபடுவதை தன்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய சீக்கியர்களின் மிக உயர்ந்த அமைப்பான அகால் தக்த் (Akal Takht), பகவந்த் மானை சீக்கியர்களுக்கு எதிரானவர் என்று கடந்த வாரம் அறிவித்து அவருக்கு தண்டனை விதித்தது. அந்த வீடியோ போலி என்பதை நிரூபிக்க, இரண்டு தடயவியல் ஆய்வகங்களில் ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கையை பகவந்த் மான் அரசு கடந்த வாரம் சமர்ப்பித்தது.
இந்த விவகாரத்தில் பரபரப்பான திருப்பமாக, பகவந்த் மான் அரசு வெளியிட்ட தடயவியல் அறிக்கை உண்மையை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்று தெரிவித்துள்ள ஹரியானா காவல்துறை, இதற்கு துணைபோனதாகக் கூறப்படும் நபர்களை கைது செய்திருப்பதாகவும் அறிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த அங்கித், பஞ்ச்குலாவைச் சேர்ந்த அருண் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள குருகிராம் போலீசார், போலி தடயவியல் மற்றும் இணைய பகுப்பாய்வு அறிக்கையை உருவாக்கி டிஜிட்டல் ஆதாரங்களை திரிப்பதற்கான சதித்திட்டத்தை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டு இந்த மோசடியில் இவர்கள் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் போலி அறிக்கையை தயாரிக்க பஞ்சாப் காவல்துறையின் உயர் அதிகாரிகளை பகவந்த் மான் அரசு தவறாகப் பயன்படுத்தி இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, “பகவந்த் மான் குற்றமற்றவர் என்ற சான்றிதழை அளிக்கும் நோக்கில் போலி அறிக்கையை பெறுவதில் லூதியானா ஆணையர் ஸ்வபன் சர்மா மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஜஷன்தீப் சிங் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். பகந்த் மான் சீக்கியர்களையும் அகால் தக்த்தையும் அவமதித்துள்ளார். தனது பண பலத்தைப் பயன்படுத்தி அகால் தக்த்தின் நற்பெயரைக் கெடுக்க அவர் முயன்றுள்ளார். அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
சீக்கியர்களுக்கும் அகால் தக்த்துக்கும் இழைக்கப்பட்ட இந்த அவமதிப்பு குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் ஏன் மவுனமாக இருக்கிறார்? அவர் எப்போது இதைக் கண்டிப்பார்? பஞ்சாபில் உள்ள தற்போதைய ஆம் ஆத்மி அரசாங்கம், சீக்கியர்களின் உணர்வுகளைத் தொடர்ந்து அவமதித்து வருகிறது. இதன்மூலம் அது முகலாய மனப்பான்மையுடன் செயல்படுகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள பகவந்த் மான், “நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். இந்த விவகாரத்தை நான் சீக்கிய சமூகத்திடம் விட்டுவிட்டேன். சீக்கிய சமூகவே முடிவெடுக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.