நவீன் பட்நாயக்
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த மாநிலங்களவை தேர்தலில் கட்சித் தலைமைக்கு எதிராகச் செயல்பட்டு, மாற்று வேட்பாளருக்கு வாக்களித்த 6 எம்எல்ஏ-க்களை பிஜு ஜனதா தளம் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே எடுக்கப்பட்டுள்ள இந்த ஒழுங்கு நடவடிக்கை, ஒடிசா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவை தேர்தலின் போது கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என பிஜேடி கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தார். இருப்பினும், வாக்கு எண்ணிக்கையின் போது கட்சியின் கணக்கிலிருந்து 6 வாக்குகள் குறைந்ததை அடுத்து, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகப் வாக்களித்தது உறுதி செய்யப்பட்டது.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டது மற்றும் கட்சிக்கு துரோகம் செய்தது ஆகிய காரணங்களுக்காக சக்ரமணி கன்ஹர் (பாலிகுடா தொகுதி), நவ கிஷோர் மல்லிக் (ஜெயதேவ் தொகுதி), சௌவிக் பிஸ்வால் (சௌத்வார்-கட்டாக் தொகுதி), சுபாசினி ஜெனா (பஸ்தா தொகுதி), ரமாகாந்த போய் (திர்தோல் தொகுதி), தேவி ரஞ்சன் திரிபாதி (பாங்கி தொகுதி) ஆகிய ஆறு பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த 6 எம்எல்ஏ-க்களும் எந்தக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறித்த அதிகாரபூர்வ விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இது பாஜகவின் தேர்தல் வியூகத்திற்குச் சாதகமாக அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் இது குறித்து இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.