புதுடெல்லி: குஜராத்தில் கடைகள், வணிக வளாகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, அம்மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
குஜராத்தின் மாநகராட்சிப் பகுதிகள், மருத்துவமனைகள், தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் 24 மணி நேரமும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன.
மற்ற இடங்களில் செயல்பாட்டு நேரங்களில் கட்டுப்பாடுகள் இருந்தன. இப்புதிய திருத்தத்தின் மூலம் அத்தகைய நேரக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்காக, குஜராத் மாநிலக் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 2019-ல் ஆளும் பாஜக அரசு ஒரு முக்கிய திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.
சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக, குஜராத் எளிதாக வணிகம் செய்வதற்கான மசோதா, 2026 நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தத்தின்படி, காவல் துறை அல்லது உள்ளூர் அதிகாரிகள் வணிக வளாகங்கள், கடைகள், உணவகங்கள், வாகனங்கள் பழுதுபார்க்கும் நிலையங்கள் உள்ளிட்டவற்றை வெறும் நேரக் கட்டுப்பாட்டின் அடிப்படையில் மட்டும் இனி மூட உத்தரவிட முடியாது.
இதுகுறித்து, மாநிலத் தொழில் துறை அமைச்சர் டாக்டர் ஜெயராம் காமித் சட்டப்பேரவையில் பேசும்போது, “மாநிலத்தில் வணிகம் தொடர்பான ஒழுங்குமுறை நடைமுறைகளை எளிமையாக்கவும், விரைவுபடுத்தவும், வெளிப்படையானதாகவும் மற்றும் வணிகத்துக்கு உகந்ததாகவும் மாற்ற உள்ளோம்.
இதன்படி, கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், சிற்றுண்டி நிலையங்கள், வாகனம் பழுதுபார்க்கும் நிலையங்கள் மற்றும் விற்பனையகங்கள் இனி 24 மணி நேரமும் செயல்படலாம்.
இருப்பினும்,ஊழியர்களின் வேலை நேரம், விடுப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகள் தொடர்பான விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும்’’ என்றார்.