பாட்னா: பிஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பிஹாருக்கான அடுத்த முதல்வர் யார் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் நிதிஷும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை.
இந்நிலையில் தனது பிஹார் மாநில சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிதிஷ்குமார், விரைவில் முதல்வர் பதவியிலிருந்தும் விலகவுள்ளார். மேலும் அவர் வரும் 10ம் தேதி மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்க உள்ளார் என்று பிஹார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் சரோகி நேற்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பிஹாரின் புதிய முதல்வராக கூட்டணிக் கட்சியான பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக பொறுப்பேற்பார் என என்டிஏ வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய முதல்வர் யார் என்பதை என்டிஏ கூட்டணி முடிவு செய்யவுள்ளது. புதிய முதல்வரைத் தேர்வு செய்யும் குழுவில் நிதிஷ்குமாரும் இருப்பார். மேலும் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதனிடையே வரும் 8-ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தை முதல்வர் நிதிஷ்குமார் கூட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் டெல்லிக்கு செல்வார் என்றும் தெரியவந்துள்ளது. 2-வது வாரத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தெரிகிறது.
பிஹாரில் கடந்த 2025-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரான நிதிஷ்குமார் பிஹாரின் முதல்வராக 10-வது முறையாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.