அமராவதி: தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு அமராவதியில் நடைபெற்று வருகிறது. இதில் 2-ம் நாளான நேற்று மறைந்த என்.டி.ராமாராவின் 103-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. என்.டி.ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: என்.டி.ராமாராவ் கண்ட கனவுகளை நனவாக்குவதே நம்முடைய லட்சியம். இதன் ஒரு பகுதியாக ஆந்திராவில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அமைச்சர் லோகேஷ் அறிவித்தார். திரையில் என்டிஆர் நடித்த கதாபாத்திரங்களை மீண்டும் நடிக்க வேண்டுமானால், அவரே மீண்டும் பிறக்க வேண்டும்.
கட்சி தொடங்கி வெறும் 9 மாதங்களிலேயே அவர் முதல்வரானார். சமூகமே கோயில், அதில் மக்கள்தான் கடவுள் எனும் தாரகமந்திரத்தை எடுத்து சொன்னவர் என்டிஆர். அவரின் தொலை நோக்கு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் பின்பற்றினால் நன்மை நடக்கும். மறைந்த என்.டி.ராமாராவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை மத்திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு சந்திரபாபு பேசினார்.