பெங்களூரு நகரம் | கோப்புப்படம்
புதுடெல்லி: கனடாவை சேர்ந்த ரெசோனன்ஸ் கன்சல்டன்சி என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம் ஆண்டுதோறும் உலகின் பல்வேறு நகரங்களை ஆய்வு செய்து தலைசிறந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இதன்படி இந்த ஆண்டு உலகம் முழுவதும் 270 நகரங்களில் ரெசோனன்ஸ் ஆய்வு செய்தது. அப்போது நகரங்களின் கல்வி கட்டமைப்பு, கலாச்சாரம், சுகாதார கட்டமைப்பு, போக்குவரத்து, இரவு வாழ்க்கை, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதன் அடிப்படையில் உலகின் தலைச் சிறந்த 100 நகரங்களின் பட்டியலை ரெசோனன்ஸ் கன்சல்டன்சி அண்மையில் வெளியிட்டது. இந்த பட்டியலில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் 2-வது இடத்தையும், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 3-வது இடத்தையும் பிடித்தன.
இந்த பட்டியலில் இந்தியாவின் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு 29-வது இடத்தைப் பிடித்தது. மகாராஷ்டிர தலைநகர் மும்பை 40-வது இடத்தையும், இந்திய தலைநகர் டெல்லி 54-வது இடத்தையும் பிடித்தன. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் 82-வது இடத்தைப் பெற்றது. வேறு எந்த இந்திய நகரங்களும் பட்டியலில் இடம்பெறவில்லை.