இந்தியா

ஜெய்சங்கருடன் வங்கதேச வெளியுறவு அமைச்சர் சந்திப்பு - இரு தரப்பு உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை

மோகன் கணபதி

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலூர் ரஹ்மான், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேற்று இந்தியா வந்த வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலூர் ரஹ்மான், தனது குழுவினருடன் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை புதுடெல்லியில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பை அடுத்து ஜெய்சங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் கலீலூர் ரஹ்மான் மற்றும் அவரது தூதுக்குழுவினரை இன்று பிற்பகல் வரவேற்றதில் மகிழ்ச்சி. நமது இரு தரப்பு உறவை அதன் பல்வேறு அம்சங்களிலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம்.

மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம். தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

          

கலீலூர் ரஹ்மானின் இந்திய பயணத்தை முன்னிட்டு வங்கதேச வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “வெளியுறவு அமைச்சர் கலீலூர் ரஹ்மான் ஏப்ரல் 10 முதல் 12 வரை மொரிஷியஸில் நடைபெற உள்ள இந்திய பெருங்கடல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஏப்ரல் 7 அன்று டாக்காவில் இருந்து புறப்படுகிறார். மொரிஷியஸ் செல்லும் வழியில் அவர் புதுடெல்லி செல்கிறார். அங்கு இந்திய வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து மரியாதை நிமித்தமான பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்த சந்திப்புகள் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் நலன்களை அடிப்படையாகக் கொண்ட இருதரப்பு உறவுகளின் ஸ்திரத்தன்மையையும் தொடர் வளர்ச்சியையும் முன்னெடுக்கும் வகையில் அமையும். வங்கதேசம் மற்றும் இந்தியா இடையிலான ஒத்துழைப்புத் துறைகளை எதிர்காலத்தில் இன்னும் அதிக பலன்மிக்கதாக உயர்த்துவதற்கு இந்த பயணம் ஒரு முக்கிய அடித்தளத்தை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வங்கதேச தேசிய கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான், கடந்த பிப்ரவரியில் அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார். இதையடுத்து, அந்நாட்டைச் சேர்ந்த ஒரு அமைச்சர் இந்தியா வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT