இந்தியா

லடாக்கில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை

செய்திப்பிரிவு

லே: லடாக் யூனியன் பிரதேசத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி வீசும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவது, விற்பனை செய்வது அல்லது இருப்பு வைத்திருப்பது கண்டறியப்பட்டால், தனி நபர்கள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் குப்பைகளை வீசுவோருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

விதி மீறல்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிகாரம் அதிகாரி களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இமயமலை தொடர்களால் சூழப்பட்டுள்ள இப்பகுதி பனிப் பாறைகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் அரிய உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது.

இந்நிலையில் லடாக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருவதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தடையை மிகவும் தீவிரமாக செயல்படுத்துவதற்காக, கள அளவிலான அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரங்களை நிர்வாகம் வழங்கியுள்ளது.

முதன்முறையாக, வட்டார வளர்ச்சி அதிகாரிகள், வட்டாட்சியர்கள், நகராட்சி அதிகாரிகள், வனச்சரகர்கள் மற்றும் வனக் காவலர்களுக்கு விதிமீறல்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் மற்றும் தொலைதூர சுற்றுலாத் தலங்கள் ஆகிய இரண்டிலும் கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT