திருமலை: பிரம்மோற்ச விழாவினையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலை ஆகம விதிகளின்படி கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் பிற்பகலுக்கு பின்னரே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி, ஆனிவார ஆஸ்தானம், தெலுங்கு உகாதி மற்றும் பிரம்மோற்சவ விழா ஆகிய இந்த விழாக்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை, கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனத்தை கடைபிடிப்பது ஐதீகம்.
தற்போது, வரும் 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு, நேற்று ஏழுமலையான் கோயில் முழுவதும் பன்னீரில் மஞ்சள், குங்குமம், பச்சை கற்பூரம் போன்ற வாசனை பொருட்களை கலந்து சுத்தம் செய்தனர்.
கோயில் கருவறை முதற்கொண்டு, கொடிமரம், பலிபீடம், உபசன்னதிகள், முகப்பு கோபுர வாசல், விமான கோபுரம் என அனைத்து இடங்களும் வாசனை திரவியத்தால் சுத்தம் செய்யப்பட்டது. அதன்பின்னர், பிற்பகல் 12 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி, திருப்பதி எஸ்பி சுப்புராயுலு, அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.