அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேட்டில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ரூ.40 லட்சத்துக்கு வீடு வாங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.
உத்தர பிரதேசத்திலுள்ள அயோத்தி ராமர் கோயில் ( ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா) அறக்கட்டளைக்குப் பக்தர்கள் அளித்த காணிக்கையில் ரூ.7 கோடிக்கும் அதிகமான பணத்தை அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை அண்மையில் ராஜினாமா செய்தனர். கோயிலுக்கு வந்த நன்கொடை நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, குற்றத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்த ராஜினாமாவை அளித்துள்ளனர். இதுதொடர்பாக கோயிலில் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதான 8 பேரில் ஒருவரான அனுகல்ப் மிஸ்ரா என்பவர் ரூ.40 லட்சத்துக்கு வீடு வாங்கியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அனுகல்ப் மிஸ்ராவின் சகோதரி கூறும்போது, “எனது சகோதரர் அனுகல்ப் மிஸ்ராவை சிக்கவைக்க சதி நடந்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு வீடு வாங்கியது உண்மைதான். அவர் தவறிழைக்கவில்லை என்பதே உண்மை. எங்களது அத்தை நேஹா மிஸ்ரா கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. நேஹா மிஸ்ராவுக்கும் எங்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாக எந்தத் தொடர்பும் இல்லை. அவருடன் எங்களுக்குச் சட்டரீதியான வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதனால்தான் அவர் இந்த வழக்கில் எங்களை சிக்க வைக்க விரும்புகிறார். அவர் இங்கு வசிப்பதும் இல்லை, அவருக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’’ என்றார்.
அனுகல்ப் மிஸ்ராவின் அத்தை நேஹா மிஸ்ரா கூறியதாவது: அனுகல்ப் மிஸ்ரா, ராமர் கோயில் அறக்கட்டளையில் வேலைக்குச் சேருவதற்கு முன்பாக அவர்களது பொருளாதார நிலைமை மோசமாக இருந்தது. ஆனால், சில ஆண்டுகளில் அவரது வாழ்க்கை முறையே மாறிவிட்டது. அயோத்தியில் அவர் வீடு வாங்கினார்.
அவரது தந்தை, விலையுயர்ந்த பொருட்களையும், வாகனத்தையும் வாங்கியுள்ளார். இந்த வழக்கில் கைதாகியுள்ள 8 பேரில் ஒருவரான லவ்குஷ் மிஸ்ரா என்பவரும் ரூ.40 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை வாங்கியுள்ளார்.
மேலும், ஒரு பெரிய வீட்டையும் அவர் தற்போது கட்டி வருகிறார். திடீரென இவ்வளவு பணம் வந்து எப்படி? அதைத்தான் நான் கேட்கிறேன். தீவிர விசாரணையின் மூலம் இந்த உண்மைகள் அனைத்தும் வெளியே வரவேண்டும். இவ்வாறு நேஹா கூறினார்.