நாக் அவுட் சுற்றில் நுழைந்து கேப் வெர்டே அணி சாதனை | FIFA WC 2026

நாக் அவுட் சுற்றில் நுழைந்து கேப் வெர்டே அணி சாதனை | FIFA WC 2026
Updated on
1 min read

ஹூஸ்டன்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள என்ஆர்ஜி மைதானத்தில் நேற்று ‘ஹெச்’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேப் வெர்டே - சவூதி அரேபியா அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது.

5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட கேப் வெர்டே அணி தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை கோல்களின்றி டிரா செய்திருந்தது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான உருகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தை 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடித்திருந்தது.

தற்போது சவூதி அரேபியா அணிக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்துள்ள கேப் வெர்டே அணி 3 புள்ளிகளை பெற்று தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் வரலாற்றில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு என்ற பெருமையைப் பெற்றது.

கேப் வெர்டே அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியதில் அந்த அணியின் கோல் கீப்பரான 40 வயதாகும் வோசின்ஹாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தாக இருந்தது. ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை 7 முறை தகர்த்தெறிந்த வோசின்ஹா, சவூதி அரேபியா அணிக்கு எதிராகவும் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தினார்.

முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் சவூதி அரேபியாவின் முகமது கன்னோ இலக்கை நோக்கி துல்லியமாக தலையால் முட்டிய பந்தை கோல் விழவிடாமல் வோசின்ஹா கச்சிதமாக தடுத்தார். தொடர்ந்து 66-வது நிமிடத்தில் முகமது அபு அல்-ஷாமத் அடித்த பந்தை தட்டி விட்டார். இதனால் கேப் வெர்டே அணி கோல் வாங்குவதில் இருந்து தப்பித்தது. இதன் பின்னர் 90+2-வது நிமிடத்தில் அப்துல்லா அல்-ஹம்தான் அடித்த பந்தையும் கோல் விழவிடாமல் தடுத்தார்.

தனது அறிமுக தொடரிலேயே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ள கேப் வெர்டே அணி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த அணி நாக் அவுட் சுற்றில் வரும் 3-ம் தேதி மியாமியில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினாவை எதிர்கொள்கிறது.

நாக் அவுட் சுற்றில் நுழைந்து கேப் வெர்டே அணி சாதனை | FIFA WC 2026
எப்ஆர்சிஏ திருத்தம் வாபஸ் பெற காங்., இடதுசாரி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in