புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை மற்றும் நன்கொடை பணம் திருட்டு புகார் தொடர்பாக எஸ்ஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ், விஎச்பி, மடாதிபதிகள், உள்ளூர் சாதுக்களின் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில், காணிக்கை திருட்டால், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ராம பக்தர்களிடையே அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதை போக்க வேண்டும். ராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் நற்பெயரைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இனி வதந்திகளை நம்பாமல், எஸ்ஐடி விசாரணையை நம்ப வேண்டும் என்று பக்தர்களுக்கு சாதுக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதுகுறித்து முக்கிய நிர்வாகி ராஜ்குமார் தாஸ் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் உள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடியும் முன்பே நாம் எந்த முடிவுக்கும் வரக் கூடாது. அயோத்தி அல்லது அறக்கட்டளை முன்னாள் பொதுச் செயலாளர் சம்பத் ராயையோ அவதூறு செய்யும் பிரச்சாரத்தை எந்தச் சூழ்நிலையிலும் ஏற்க முடியாது” என்றார்.
விஎச்பி சர்வதேசப் பொதுச் செயலாளர் பஜ்ரங் லால் பாக்டா கூறும்போது, “காணிக்கை திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றமற்றவர்கள் தங்கள் சமூக சேவையைத் தொடர்வார்கள். சம்பத் ராய் குற்றமற்றவர். அவர் பகவான் ராமரின் உண்மையான பக்தர்” என்றார்.
இந்தக் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் முன்னாள் நிர்வாகியும் ராமர் கோயில் பொறுப்பாளருமான சுரேஷ் பய்யாஜி ஜோஷி, பத்தர் மந்திர் மஹந்த் மனிஷ்தாஸ், ராமாஸ்ரமத்தின் மஹந்த் ஜெயராம் தாஸ், மஹா மண்டலேஷ்வர் மஹந்த் கிரீஷ்தாஸ், நிர்வாணி ஆனியின் மஹந்த் முரளிதாஸ் உள்ளிட்டோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
பொதுச் செயலாளர் சம்பத் ராய் ஒரு அப்பாவி என்று குறிப்பிட்ட சாதுக்கள், அவர் தனது வாழ்நாளை ராம் லல்லா சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். அவருக்கு சாதுக்கள் உறுதுணையாக நிற்பார்கள் என்று தெரிவித்தனர்.