ஆக்சிஸ் மை இண்டியா நிறுவன தலைவர் பிரதீப் குப்தா
கொல்கத்தா: கருத்துக் கணிப்பின்போது அச்சத்தால் மக்கள் பதில் அளிக்க மறுக்கிறார்கள் என்று ஆக்சிஸ் மை இண்டியா நிறுவன தலைவர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் முதல்கட்ட தேர்தவின்போது, வாக்களித்த மக்களிடம் ஆக்சிஸ் மை இண்டியா நிறுவன பிரதிநிதிகள் கருத்துகளைக் கேட்டனர். ஆனால் பெரும்பாலானோர் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் பிரதீப் குப்தா கூறியதாவது: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்போது யாருக்கு வாக்களித்தீர்கள் என்று மக்களிடம் கேள்வி எழுப்புவோம்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 90% பேர் யாருக்கு வாக்களித்தோம் என்ற விவரத்தை பகிரங்கமாக தெரிவிப்பார்கள். பத்து சதவீதம் பேர் மட்டுமே மவுனம் காப்பார்கள். குஜராத்தில் இந்த சதவீதம் சற்று அதிகம். அந்த மாநிலத்தில் சுமார் 20% பேர் பதில் அளிக்க மாட்டார்கள். வடகிழக்கு மாநிலங்களில் சுமார் 15% பேர் மவுனம் காப்பார்கள்.
ஆனால் மேற்குவங்கத்தின் நிலைமை முற்றிலும் மாறுபட்டது. இங்கு தேர்தல் சார்ந்த கருத்துக் கணிப்புகளை நடத்துவது மிகவும் கடினம். கடந்த 23-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. அப்போது யாருக்கு வாக்களித்தீர்கள் என்று பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினோம். 10 பேரில் 2 மட்டுமே பதில் அளித்தனர். அச்ச உணர்வு காரணமாக 8 பேர் மவுனம் காத்தனர்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி மேற்குவங்க மக்களிடம் பெரும் அச்சத்தை விதைத்திருக்கிறது. ஏதாவது ஒரு கட்சிக்கு வாக்களித்தோம் என்று கூறினால் தங்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
மிகுந்த சிரமங்களுக்கு இடையே முதல் கட்ட தேர்தலில் கருத்துக் கணிப்பை நடத்தி உள்ளோம். இரண்டாம் கட்ட தேர்தலின்போதும் கருத்துக் கணிப்பை நடத்துவோம். அன்று மாலை மேற்குவங்கம் உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான எங்களது கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.