அவிமுக்தேஷ்வர்
புதுடெல்லி: உத்தராகண்டின் ஜோதிஷ்வர் மடத்தின் சங்கராச்சாரியாராக இருப்பவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த். பிரயாக் ராஜ் மகரமேளா புனித நீராடலின் போது அவரது ஆதரவாளர்கள் மற்றும் உ.பி. போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் அவரது ஆதரவாளர் படுகாயமடையக் காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்குமாறு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் வலியுறுத்தினார். பலன் இல்லாத நிலையில் மகரமேளாவை புறக்கணிப்பதாகக் கூறி அங்கிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், மகரமேளாவில் தனது முகாமில் சீடர்களாக இருந்த சிறுவர்களில் மூவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகப் புகார் எழுந்தது. இப்பிரச்சினையில் சங்கராச்சாரியார் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி முக்தி நிர்மான் அறக்கட்டளையின் தலைவர் அசுதோஷ் பிரம்மச்சாரி என்பவர் போக்ஸோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி அவிமுக்தேஷ்வர் மீது பிரயாக்ராஜின் ஜுசி காவல் நிலையத்தில் கடந்த வாரம் வழக்கு பதிவானது. இதில், சங்கராச்சாரியாரின் உதவியாளர் முகுந்தானந்த் பிரம்மச்சாரி மற்றும் பெயர் தெரியாத மூன்று பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஜுசி போலீஸார் 3 சிறுவர்கள் தங்கியிருந்த ஹர்தோய் சென்று விசாரணை நடத்தினர்.
அத்துடன் அம்மூவருக்கும் மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதில், சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட புகார் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், போக்ஸோ வழக்கின் கீழ் அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது. இதனால் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவிமுக்தேஷ்வர் நேற்று முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.