இந்திய பைலட் ஸ்மித் மச்சார்

 
இந்தியா

இந்திய பைலட் ஸ்மித் மச்சார் மீது தாக்குதல்: ஃபிளை துபாய் விமான சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியது என்ஐஏ

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஃபிளை துபாய் விமான சம்பவம் தொடர்பாக என்ஐஏ வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

செப்டம்பர் 30-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃபிளை துபாய் விமானத்தை கடத்தி கட்டிடத்தின் மீது மோதி தகர்க்க முயன்றார் ஓமன் நாட்டை சேர்ந்த துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி. ஆனால் இந்திய பைலட் ஸ்மித் மச்சார், தனது உயிரை பணயம் வைத்து இந்த சதித் திட்டத்தை முறியடித்து,விமானத்தில் இருந்த 180 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.

அதே நேரத்தில் துணை பைலட் கோடாரியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இஸ்ரேலும் தன் பங்குக்கு தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஃபிளை துபாய் விமான கடத்தல் முயற்சி சம்பவம் தொடர்பாக இந்தியாவின் தீவிரவாத தடுப்பு அமைப்பான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணையை தொடங்கி உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாட்டு மண்ணில் நடக்கும் தீவிரவாத சம்பவங்களில் இந்தியர்கள் பாதிக்கப்பட்டால் அதனை விசாரிக்கும் அதிகாரம் என்ஐஏ-க்கு உள்ளது. ஃபிளை துபாய் விமான கடத்தல் முயற்சி சம்பவத்தில் இந்திய குடிமகனான ஸ்மித் மச்சார் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தச் சம்பவத்தை விசாரிக்குமாறு உள்துறை அமைச்சகம் என்ஐஏ-க்கு உத்தரவிட்டது.

அதன் பேரில் கடத்தல் தடுப்புச் சட்டம், 2016-ன் பிரிவு 6 மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உபா) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இஸ்ரேல் அதிகாரிகள் மற்றும் ஃபிளை துபாய் நிறுவனத்திடமிருந்தும் தேவையான தகவல்கள் மற்றும் ஒத்துழைப்பை என்ஐஏ பெறும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT