ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காமில் கடந்த வாரம் சிஆர்பிஎப் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் லஷ்கர் தீவிரவாதி லத்தீப் பட் உள்ளிட்ட இருவர் பாதுகாப்புப் படையினருடனான என்கவுன்ட்டரில் உயிரிழந்தனர்.
கடந்த நவம்பர் 11 அன்று குல்காமில் உள்ள மிர் பஜார் பகுதியில் சிஆர்பிஎப் முகாம் மீது, அதிநவீன ஆயுதங்களுடன் வந்த இரண்டு தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூன்று வீரர்கள் காயமடைந்தனர்.
இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய லத்தீப் பட், உமர் ஆகிய இரண்டு தீவிரவாதிகளும் சுற்றிவளைக்கப்பட்டு என்கவுன்ட்டர் நடந்து வருகிறது என்று ஜம்மு காஷ்மீர் போலீஸார் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
இதில் தேடப்பட்டு வந்த லத்தீப் பட் உள்ளிட்ட இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. என்கவுன்ட்டர் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அனைத்தும் முடிந்தபிறகே ராணுவம் தரப்பில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.