இந்தியா

லிவ்-இன் உறவாளர்கள் கலக்கம் ஏன்? - அசாமில் பொது சிவில் சட்டம் அறிமுகமும் எதிர்வினையும்

பாரதி ஆனந்த்

குஜராத், உத்தராகண்ட் மாநிலங்களைத் தொடர்ந்து அசாம் மாநிலத்திலும் பொது சிவில் சட்டம் அமலாகிறது. அதனை முன்னிட்டு, அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா மே 25-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா மே 27 அன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறுகையில், “திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது நிர்ணயம், பலதார திருமணங்களை தடை செய்வது, பெற்றோரின் சொத்தில் மகள்களுக்கு சம உரிமை மற்றும் திருமணமின்றி இணைந்து வாழும் லிவ் - இன் உறவுகள் ஆகிய 4 முக்கிய விஷயங்களை இந்தச் சட்டம் பிரதானமாக உள்ளடக்கியுள்ளது” என்றார்.

இதில், திருமணமின்றி வாழும் லிவ் - இன் உறவாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து கொள்வது தொடர்பான சட்டம் கவனம் ஈர்த்துள்ளது. பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அசாம் முதல்வர் விவரிக்கையில், “லிங்-இன் உறவாளர்கள் தங்களின் உறவை முறைப்படி பதிவு செய்வதன் மூலம், அந்த உறவில் இருப்போரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு, அத்தகைய உறவின் மூலம் குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கும் சட்ட பாதுகாப்பும் கிடைக்க வழிவகை உருவாகும்,” என்று கூறினார்.

இந்தியாவில் லிவ் - இன் உறவுமுறை என்பது சட்டவிரோதம் அல்ல. அதேவேளையில் அதற்கு நாடு தழுவிய சட்ட அங்கீகாரமும் இல்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் பெண்களுக்கு ஜீவனாம்சம் போன்ற சில உரிமைகள் மட்டுமே உண்டு. இந்த நிலையில்தான் பொது சிவில் சட்டம் மூலமாக மாநில அளவில் இத்தகைய உறவுகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு வருகின்றன என்கிறது ஒரு தரப்பு.

லிவ்-இன் உறவாளர்கள் கவனத்துக்கு!

அசாமில் உள்ள லிவ்-இன் உறவாளர்கள் மாநிலத்தில் அமலாகவுள்ள பொது சிவில் சட்டம் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அசாம் பொது சிவில் சட்டமானது, லிவ்-இன் உறவாளர்கள் தங்களின் உறவைப் பதிவு செய்வதற்கு என்றே, நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப் பரிந்துரைத்திருப்பதாக தகவல். அதாவது திருமணங்களைப் பதிவு செய்யும் பதிவாளர்களே இனி லிவ்-இன் உறவுகளையும் பதிவு செய்ய வழிகோலுகிறது என்று கூறப்படுகிறது.

இருப்பினும், அசாம் மாநிலத்தின் மலையக மற்றும் சமவெளி வாழ் பழங்குடியினர்களுக்கு இந்த பொது சிவில் சட்டம் பொருந்தாது எனக் கூறப்படுகிறது. அவர்களது 'பாரம்பரிய மத வழக்கங்கள், நடைமுறைகள் மற்றும் சடங்குகள்' ஆகியவற்றுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அசாம் மக்கள் தொகையில் (2011 கணக்கெடுப்பின்படி) 12.45% பேர் பழங்குடிகள், 34.22% பேர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை லிவ்-இன் உறவு கசந்து உறவாளர்கள் பிரியும் பட்சத்தில், அந்த உறவில் இருந்த பெண், அதன் மூலமாக பிறந்த குழந்தைகளுக்கு சட்டப் பாதுகாப்பு, வாரிசுரிமையை நிலைநாட்ட இந்த பொது சிவில் சட்டம் உறுதுணையாக இருக்கும் என்று ஆளுங்கட்சி சார்பில் கூறப்படுகிறது.

இருப்பினும், லிவ்-இன் உறவாளர்கள் சட்டப்பூர்வமாக தங்கள் உறவை பதிவு செய்வதற்கான காலக்கெடு எதுவரை? அதற்குத் தேவையான ஆவணங்கள் என்னென்ன? அதைக் கடைப்பிடிக்காவிட்டால் என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும் என்பன போன்ற நுணுக்கமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மே 27-ல் இச்சட்ட மசோதா விவாதிக்கப்பட்டு சட்டம் அமலாகும்போது அதுபற்றிய கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அசாம் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ரைஜோர் தல், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முன்னர் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

இந்திய அரசியல் சாசன சட்டம் 44, பொது சிவில் சட்டத்தைப் பரிந்துரைக்கிறது. ஆனால், சுதந்திரம் பெற்ற காலம் தொட்டே, பல்வேறு மதங்கள் சார்ந்த சிவில் சட்டங்களே அந்தந்த மதம் சார்ந்த மக்களின் தனிப்பட்ட விவகாரங்களில் தீர்ப்பை தீர்மானிக்கும் பலத்தைக் கொண்டுள்ளன.

அப்படியிருக்க 2024-ம் ஆண்டு, பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலம் நாட்டிலேயே முதன்முறையாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியது. தொடர்ந்து அதே ஆண்டு மார்ச் மாதம் குஜராத் மாநிலமும் இதனை அமல்படுத்தியது. பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது என்பதே பாஜகவின் கொள்கை ரீதியிலான முக்கிய வாக்குறுதிகள். மற்ற இரண்டும் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், இப்போது பொது சிவில் சட்டமும் படிப்படியாக அமலாகிவருகிறது.

அசாமில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் பாஜக அளித்த முக்கிய வாக்குறுதி, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்பதே.

இந்தச் சூழலில், உத்தராகண்ட் மாநிலத்தில் லிவ்-இன் உறவு சார்ந்து பொது சிவில் சட்டம் என்ன சொல்கிறது என்று சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

உத்தராகண்டில் லிவ்-இன் உறவில் இணையும் இணையர்கள் அவ்வாறு இணைந்த ஒரு மாதத்தில் அதைப் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் 3 மாதம் சிறைத் தண்டனையுடன் ரூ.10 ஆயிரம் அபராதம் என ஏதேனும் ஒன்றையோ, இல்லை இரண்டையுமே அனுபவிக்க வேண்டியிருக்கும்.

அதேபோல் லிவ்-இன் உறவாளர்களில் யாரேனும் ஒருவரின் வயது 21-க்கு கீழ் இருந்தால்கூட அவர்களைப் பற்றிய தகவல், அவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். அதேபோல், லிவ்-இன் உறவு முறிந்தால் அதுபற்றியும் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமக்கப்பட்டது.

ஆனால், சில சட்டப்பிரிவுகள் தனிநபர் சுதந்திரத்தை முடக்குவதாக எதிர்ப்பு கிளம்ப, சில திருத்தங்களைச் செய்துள்ளதாகக் கூறி உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

அதாவது, லிவ்-இன் உறவாளர்கள் பதிவுக்கு ஆதாரம், சாதிச் சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும், லிவ்-இன் உறவில் ஒரு பெண் தாயானால் அதை கட்டாயமாக அரசு இயந்திரத்திடம் தெரிவிக்க வேண்டும் ஆகிய கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன.

தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது சிவில் சட்டத்தில், உத்தராகண்ட் சட்டத்தைப் போலவே வரைமுறைகள் இருந்தன. அதில் சட்டப்பூர்வமாக ஏற்கக்கூடிய லிவ்-இன் உறவு என்பது சட்டப்பூர்வ திருமணத்தைப் போலவே ஆண் - பெண்ணுக்கு இடையேயானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மே 27-ம் தேதி தாக்கலாகும் அசாம் மாநில பொது சிவில் சட்ட மசோதாவில் என்ன மாதிரியான விதிமுறைகள் இருக்கும் என்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்திய மக்கள் அனைவரின் தனிப்பட்ட உரிமைகளையும் ஒரு பொதுவான சட்டத்தின் கீழ் கொண்டு வருவதே பொது சிவில் சட்டத்தின் பிரதான நோக்கம். ஆனால், இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. மொழி, இன, கலாச்சார ரீதியாக பன்மைத்துவம் கொண்ட இந்திய ஜனநாயகத்தில் ஒற்றுமைக்கு ஒரே சிவில் சட்டம் மட்டுமே போதுமானதாகாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அதேபோல் லிவ்-இன் உறவில் இருப்பவர்களும், “இது தனியுரிமையை சிதைக்கும் வேலை. சாதி, மதப் பிரச்சினைகளால் வழக்கமான நடைமுறையான திருமணம் மூலம் இணைந்து வாழ முடியாதவர்கள் லிவ்-இன் முறையில் தாங்கள் விரும்பிய நபருடன் வாழ முடியும். ஆனால் அந்தத் தனியுரிமைக்குள் அத்துமீறி அதைப் பதிவு செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பது, அதை மீறினால் தண்டனை வழங்க சட்டத்தில் வழிவகுப்பது, ஆவணங்கள் என்ற பெயரில் சாதிச் சான்றிதழ் கோருவது எல்லாம் இந்த முறையையே ஒழிக்கும் முயற்சிதான்,” என்கின்றனர்.

ஆனால், பாஜக தரப்பும், பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்ட, வரப்படவுள்ள மாநில அரசுகளும், இது பெண்கள், குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாக்கும். பாலின சமத்துவத்துக்கு வழிகோலும் என்கின்றன.

மே.27-ல் அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் மசோதா நிறைவேறிய பின்னர் நிச்சயமாக இன்னும் ஆழமான விவாதம் எழும் என்று எதிர்பார்க்கலாம்.

SCROLL FOR NEXT