எம்.பி. பிரத்யுத் பர்தோலாய்
குவாஹாட்டி: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் பர்தோலாய் நேற்று பாஜகவில் இணைந்தார்.
அசாமில் ஏப்ரல் 9ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் 3-வது முறையாக ஆட்சியை தக்க வைக்க, பாஜக தீவிரமாக செயலாற்றி வருகிறது. இந்நிலையில், அசாம் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த புபன் குமார் போரா கடந்த மாதம் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்த சூழ்நிலையில், அசாம் மாநிலம் நகான் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் பர்தோலாய் நேற்று முன்தினம் அக்கட்சியில் இருந்து விலகினார்.
இது தொடர்பாக கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், “உள் கட்சியில் சில பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறேன். எனவே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன். இந்த முடிவில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. எனினும், இந்த முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்" என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா முன்னிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரத்யுத் பாஜகவில் இணைந்தார். பின்னர் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரத்யுத் போட்டியிட வேண்டும் என்று பாஜக மத்திய தலைமைக்கு பரிந்துரை செய்ய உள்ளோம். சுயமரியாதை உள்ள எவரும் காங்கிரஸ் கட்சியில் நீடிக்க முடியாது. மேலும் பல காங்கிரஸ் தலைவர்களை எங்கள் கட்சிக்கு கொண்டு வருவதே எங்களது நோக்கம்” என்றார்.