குவாஹாட்டி: அசாம் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, குவாஹாட்டியின் ஜலுக்பாரி தொகுதியில் 3-வது முறை போட்டியிடுகிறார்.
அவர் நேற்று காலைதனது மனைவி ரினிகி புயான் சர்மா, 2 குழந்தைகளான நந்தில், சுகன்யா ஆகியோருடன் ஜலுக்பாரி பகுதியில் உள்ள கரல் புனியாதி தொடக்கப் பள்ளிக்கு சென்று வாக்களித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஒரு வாக்காளராக நான் எனது கடமையை ஆற்றியுள்ளேன், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வாக்காளர்கள் அனைவரும் தங்கள் கடமையை ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு மக்கள் மிகப் பெரிய வெற்றியை தருவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
தன்னை பற்றியும் தனது மனைவியை பற்றியும் காங்கிரஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, "காங்கிரஸ் எங்கே இருக்கிறது, அதைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை" என்றார்.
தனது மனைவியின் பாஸ்போர்ட்டுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் பவன் கேரா எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து ஹிமந்தா கூறுகையில், "பவன் கேரா ஒரு ஓடிப்போனவர். நான் ஏன் அவருக்குப் பதிலளிக்க வேண்டும்?" என்றார்.