இந்தியா

அசாம் முதல்வரின் சர்ச்சைக்குரிய வீடியோ: கடும் எதிர்ப்புக்குப் பின் நீக்கம்

டெக்ஸ்டர்

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, முஸ்லிம்களின் புகைப்படங்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்று சித்தரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோவை அம்மாநில பாஜக தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. 

அசாம் பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா முஸ்லிம் நபர்களின் புகைப்படங்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ‘பாயிண்ட் பிளாங்க் ஷூட்’ என்ற வாசகங்களுடன் வெளியான இந்த வீடியோ, வங்கதேச முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. 

          

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இந்த வீடியோவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். "இது ஒரு சாதாரண வீடியோ அல்ல, சிறுபான்மையினரை குறிவைத்து நடத்தப்படும் கொலைகளை நியாயப்படுத்தும் முயற்சி. இது ஒரு இனப்படுகொலைக்கான அழைப்பாகவே பார்க்கப்பட வேண்டும்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். 

இது தொடர்பாக பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அசாம் பாஜக அந்த வீடியோவை நீக்கியுள்ளது. எனினும் பதிவிறக்கம் செய்யப்பட்ட அந்த வீடியோவை பலரும் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT