வெங்கடேஷ் கர்க்
புதுடெல்லி: ஹரியானாவின் அம்பாலா மாவட்டத்தின் நாராயண்கரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் கர்க் (29). இவரது தலைமையில் சுமார் 53 உறுப்பினர்களுடனான குற்றக் கும்பல் ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்தது.
காவல் துறை விசாரணையின்படி, அம்பாலா, யமுனாநகர், குருக்ஷேத்ரா, பஞ்ச்குலா, சண்டிகர் ஆகிய இடங்களில் இந்த கர்க் கும்பலுக்கு எதிராக கொலை, கொலை சதி, துப்பாக்கிச் சூடு, மிரட்டிப் பணம் பறித்தல், சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருத்தல் என 34 வழக்குகள் பதிவாகியுள்ளன. நாராயண்கரில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஹர்விலாஸ் கொல்லப்பட்ட சம்பவத்திலும் கர்க் கும்பலின் பெயர் அடிபட்டது.
கடந்த டிசம்பர் 10, 2024-ல், வெங்கடேஷ் கர்க் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பினார். அங்கிருந்து ஜனவரி 26, 2025 அன்று ஜார்ஜியா நாட்டுக்குச் சென்றார். இதற்காக கர்க், போலி ஆவணங்களை பயன்படுத்தி பாஸ்போர்ட்டைப் பெற்றுள்ளார்.
இந்த வழக்கு ஹரியானாவின் சிறப்பு அதிரடிப் படை(எஸ்டிஎப்) ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கர்க்கின் பாஸ்போர்ட்டை ரத்து செய்த எஸ்டிஎப், தேடும் முயற்சியில் இறங்கி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அவர் ஜார்ஜியாவில் கைது செய்யப்பட்டார்.பின்னர் நேற்று ஹரியானாவின் எஸ்டிஎப் அதிகாரிகள், விமானம் மூலம் அவரை டெல்லி அழைத்து வந்தனர்.
வெளிநாட்டுக்குத் தப்பியோடிய ஒரு குற்றவாளியை அந்நாட்டுக்குச் சென்று ஹரியானா போலீஸார் கைது செய்வது இதுவே முதல்முறை. ஜார்ஜியாவிலிருந்து இந்தியாவுக்கு ஒரு குற்றவாளி, நாடு கடத்தப்பட்டு அழைத்து வரப்படுவதும் இதுவே முதல் முறையாகும். ஜார்ஜியாவிலிருந்து வெங்கடேஷ் கர்க் மீது, ‘லுக்-அவுட்' மற்றும் இண்டர்போல் மூலம் ‘ரெட் கார்னர்’ நோட்டீசுகள் பிறப்பிக்கப்பட்டன.
சிபிஐ மூலம் இருப்பிடத்தை உறுதி செய்த பின், மத்திய அரசு மூலம் அவரை நாடு கடத்தி அழைத்து வருவதற்கான சட்ட நடைமுறைகள் தொடங்கப்பட்டன. ஜார்ஜியாவின் நீதித்துறை மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளுடன் தொடர்ச்சியான தொடர்பில் மத்திய வெளியுறவுத் துறை இருந்தது. சட்ட நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டு வெங்கடேஷ் கர்க் இறுதியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். வெங்கடேஷ் கர்கை பாதுகாப்பாக அழைத்து வர கஜகிஸ்தான் அரசும் பெரிதும் உதவி உள்ளது.