வங்கக் கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல், ஆந்திர மாநிலம் பாபட்லா-விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் ஜலரிபேட்டை மீனவ கிராமத்தில் நேற்று தங்களது படகுகளை பத்திரப்படுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். படம்: கே.ஆர்.தீபக்.
அமராவதி: மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, நேற்று அதிகாலை மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக உருவானது. இதற்கு ‘அர்னாப்’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த ‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்து ஆந்திர மாநிலக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. விசாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 610 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து சுமார் 690 கி.மீ. தொலைவிலும் இருந்தது. இந்தப் புயல் நாளை (28-ம் தேதி) காலை பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே, யானம் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக மணிக்கு 144 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
‘ரெட் அலர்ட்’ - புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசாவின் கடலோரப் பகுதிகளுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உரிய மீட்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். புயல் காரணமாக காக்கிநாடா, கோனசீமா, ஏலூரு, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதுடன், பல பகுதிகளில் கனமழையும் பெய்தது. இதையடுத்து பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
இதனால் இணையச் சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆந்திராவுக்கு 7 தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்களும், 8 மாநிலப் பேரிடர் மீட்புக் குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அர்னாப் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து கரையை கடக்க உள்ள நிலையில் தமிழகத்துக்கான பாதிப்பு நீங்கி உள்ளது. ஏற்கெனவே இந்த புயலால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. ஊட்டி, கொடைக்கானலில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருந்தன. இன்று முதல் வரும் 1-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.