புதுடெல்லி: எச்-1பி விசா பணியாளர்களை அடிமைத் தொழிலாளர்கள் என ஜே.டி.வான்ஸ் குறிப்பிட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த ஊதியத்திற்கு வெளிநாட்டுப் பணியாளர்களைப் பணிக்கு அமர்த்தி அமெரிக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அப்போது அவர் எச்-1பி விசா பணியாளர்களை அடிமைத் தொழிலாளர்கள் என்ற கருத்தை தெரிவித்தது கடும் கண்டனத்துக்குரியது. இத்தகைய கருத்துக்கள் தேவையற்றவை என்பதுடன் அவர் பயன்படுத்திய சொற்கள் மிகவும் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
அமெரிக்காவில் உள்ள இந்திய வல்லுநர்கள் உயர்கல்வி கற்றவர்கள். அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு பெரும் பங்காற்றி வருகின்றனர். வேதனை அளிக்கிறது. துணை அதிபரின் கருத்துக்கள் அவரின் பங்களிப்பை புறக்கணிப்பதாக உள்ளன. அமெரிக்காவின் வளர்ச்சியும் செழிப்பும் தலைமுறை தலைமுறையாக வந்த குடியேறிகளின் உழைப்பால் உருவானது.
வரலாற்று ரீதியாக வலிமிகுந்த காலனித்துவக் காலத்தைக் குறிக்கும் சொற்களைப் பயன்படுத்துவது வேதனையளிக்கிறது. தொழில் வல்லுநர்களின் இடப்பெயர்வு இரு நாடுகளின் பொருளாதாரத்துக்கும் நன்மை பயக்கும். மேலும், "நிரந்தரப் பணிச் சான்றிதழ்" இடைநிறுத்தம் என்பது எ-1பி விசா நடைமுறையிலிருந்து வேறுபட்டது. தற்போதைய எச்-1பி விசா தாரர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை. இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
8 நிறுவனங்களுக்குத் தடை
ட்ரம்ப் நிர்வாகம், நிரந்தரப் பணிச் சான்றிதழ் திட்டத்தில் பங்கேற்பதிலிருந்து 8 முக்கிய ஐடி நிறுவனங்களுக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது. இதில், இந்தியாவின் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக், காக்னிசண்ட், அமெரிக்காவின் மைக்ரோசாப்ட், அடோப், கேப்ஜெமினி நிறுவனங்களும் அடக்கம். அமெரிக்கத் தொழிலாளர் துறை நிரந்தரப் பணிச் சான்றிதழ் திட்டத்தின்கீழ் புதிய விண்ணப்பங்களை ஏற்பதையும் பரிசீலிப்ப தையும் நிறுத்தியுள்ளது. ஆண்டுதோறும் வழங்கப்படும் எச்-1பி விசா ஒப்புதல்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்திய வல்லுநர்களுக்கே கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தப் பாதிப்பும் இல்லை – டிசிஎஸ்
அமெரிக்க அரசின் இந்த முடிவால் நிறுவனத்தின் பணியாளர்கள் அமைப்பிலோ அல்லது வாடிக்கையாளர் திட்டங்களிலோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது என இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ளூர் திறமையாளர்களைப் பணிக்கு அமர்த்துவதற்கே நிறுவனம் முன்னுரிமை அளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் டிசிஎஸ் தாக்கல் செய்த பெர்ம் விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்தது. எனவே, இந்தத் தடை நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்காது என்று டிசிஎஸ் தெரிவித்துள்ளது.