புதுடெல்லி: அரபு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று சந்தித்தனர்.
இந்தியா - அரபு நாடுகள் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் இரண்டாவது கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக அரபு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் டெல்லி வந்துள்ளனர். அவர்கள் பிரதமர் மோடியை நேற்று சந்தித்தனர்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் அரபு நாடுகள் மக்கள் இடையேயான தொடர்பு மிக பழமையானது மற்றும் ஆழமானது என்றும், இது இந்தியா - அரபு நாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்துகிறது என பிரதமர் மோடி அரபு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களிடம் எடுத்து கூறினார்.
வரும் ஆண்டுகளிலும் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் இதர முக்கிய துறைகளில் அரபு நாடுகளுடன் கூட்டாக செயல்படுவதில் இந்தியா உறுதியுடன் உள்ளது என்பதையும், இதன் மூலம் இருநாட்டு மக்களும் பயனடைவர் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
பாலஸ்தீன மக்களுக்காக தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் இந்தியா காசாவில் நடைபெறும் அமைதி முயற்சிகளை வரவேற்பதாகவும் பிரதமர் மோடி கூறினார். பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையை உருவாக்கும் முயற்சியில் அரபு நாடுகள் முக்கிய பங்காற்றுவதையும் பிரமதர் மோடி பாராட்டினார். இவ்வாறு பிரதமர் அலுவலகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.