அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி சென்று, அங்கு தனது கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, எம்.பி.க்கள் ஸ்ரீகிருஷ்ண தேவராயுலு, அப்பல்நாயுடு ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
அப்போது வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி போகாபுரத்தில் புதிய விமான நிலைய திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்தார். அதற்கு கட்டாயம் வருவதாக பிரதமர் உறுதி அளித்தார். இதையடுத்து தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்து இருவரும் சுமார் அரை மணி நேரம் உரையாடினர்.
கோதாவரி - காவிரி இணைப்பு: பின்னர், மத்திய அமைச்சர்கள் சி.ஆர்.பாட்டீல், பியூஷ் கோயல், மனோகர் லால் கட்டார் ஆகியோரை சந்திரபாபு நாயுடு சந்தித்தார். இதில் நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலுடன் கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பு திட்டம் குறித்து சந்திரபாபு பேசினார். இந்த திட்டத்தால் ஏற்படும் நன்மைகளை அவர் விளக்கினார்.
“ஸ்ரீ சைலத்தில் இருந்து காவிரியை இணைப்பதற்கு பதிலாக பனகசர்லாவில் இருந்து இணைப்பது மிகுந்த பயன் அளிக்கும். நாட்டின் நன்மைக்கும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்கும் கோதாவரி - காவிரி நதிகளை இணைப்பது அவசியம். இதற்காக சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள், அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தை விரைவில் கூட்டவேண்டும்” என்று சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டார்.