ராகுல் மம்கூத்ததில்| கோப்புப் படம்

 
இந்தியா

பாலியல் வழக்கில் சிக்கிய கேரள எம்எல்ஏவை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் நடவடிக்கை

வெற்றி மயிலோன்

திருவனந்தபுரம்: பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததிலை, அக்கட்சி நீக்கியுள்ளது.

பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய கருக்கலைப்பு வழக்கில் எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததிலின் முன்ஜாமீன் மனுவை திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றம் இன்று நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தொடர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் வருவதால், ராகுல் மம்கூத்ததில் கட்சியில் தொடர்வது நெறிமுறை ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததாக மாறிவிடும் என கேரள காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த செவ்வாயன்று, 23 வயதான வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், 2023-ஆம் ஆண்டு தங்கள் வருங்கால திருமணம் குறித்து விவாதிக்க எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் ஒரு ரிசார்ட்டுக்கு தன்னை அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டி, கேரள காங்கிரஸ் தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்பியது பரபரப்பை உருவாக்கியது. காங்கிரஸ் தலைவர் ஜோசப் அந்த புகாரை மாநில காவல்துறை தலைவருக்கு அனுப்பினார்.

மேலும், முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்பு கொண்டும் அந்தப் பெண், ராகுல் மம்கூத்ததில் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய கருக்கலைப்பு புகார் அளித்தார். இதனை தொடர்ந்து எம்எல்ஏ ராகுல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே ஆகஸ்டு மாதத்தில் சில பெண்கள், ராகுல் மம்கூத்ததில் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், ராகுல் மம்கூத்ததிலை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலும் அவரைப் பிடிக்க போலீசார் வலை வீசியுள்ளனர். மேலும், அவர் வெளிநாடுகளுக்கு தப்பிப்பதை தடுக்க விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT