

திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி நேற்று மாலை கோயில் முன்பாக திரண்டு கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்த பக்தர்கள்.
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் அரசு தரப்பில் திட்டமிட்டு சதி செய்துவிட்ட தாக கருதி முருக பக்தர்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வாகவும், போராட்டமாகவும் எடுத்துச் செல்வோம் என இந்து முன்னணி, பாஜகவினர் தெரிவித்துள்ளனர். மேல்முறையீடு வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவை பொறுத்து அடுத்தகட்ட செயல்பாடு இருக்கும் என அறிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என மிகுந்த நம்பிக் கையில் இருந்த பக்தர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏமாற்றமடைந்தனர். இப்பிரச்சினையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்து இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசித்தனர்.
இதுகுறித்து இந்து அமைப்பினர் கூறியதாவது: தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவே அரசு தரப்பில் தகவல் பரப்பப்பட்டது. எனினும் இதை நாங்கள் நம்பவில்லை. இதனால் கோயில் வளாகத்தில் அமைதியாக கூடி முருகனை வேண்டிக் கொண்டோம். மனுதாரரும் தீபம் ஏற்ற தயார் நிலையில் இருந்தார்.
அனுமதிக்க மறுத்ததை தொடர்ந்து திருப்பரங் குன்றத்தில் கற்பூரம் ஏற்றி முறையிட்ட ராம ரவிக்குமார்.
அரசு தரப்பில் மேல்முறையீடு முயற்சி முதலில் கைகூடவில்லை. இதன் பின்னர் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்ற முடிவில் இருப்பது தெரிந்தது. தீபம் ஏற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை என்பதும் தெரிந்தது.
உடனே அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தோம். அப்போது கோயில் அலுவலர் தரப்பில், தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதனால்,தமிழக போலீஸாரையும், அரசையும் நம்பி எந்த பலனும் இல்லை என்பதை அறிந்து, நீதிமன்றத்தில் தெரிவித்தோம். அவமதிப்பு வழக்கை சந்திக்க அரசும் தயாராகவே இருந்தது.
இதனாலேயே, நியாயத்தை சட்டப்படி நிறைவேற்ற நீதிபதி புதிய உத்தரவை பிறப்பித்தார். சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன், எங்களை தீபம் ஏற்ற அனுமதித்தார். இதை சிறிதும் எதிர்பார்க்காத அதிகாரிகள் திடீரென ஆலோசித்து 144 தடை உத்தரவை மாலை 6.30 மணிக்கு மேல் பிறப்பித்தனர்.
இந்த உத்தரவை காரணம் காட்டி மலையேற விடக்கூடாது என திட்டமிட்டனர். சிஐஎஸ்எப் போலீஸார் 65 பேர் பாதுகாப்புக்கு வந்தும், அவர்களை அனுமதிக்கவில்லை. நீதிபதியே மலைக்கு வரவுள்ளார் என தகவல் பரப்பப்பட்டது.
மாவட்ட நீதிபதியான ஆட்சியர் பிறப்பித்த 144 தடை உத்தரவுதான் பெரிது என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை 144-தடையை காரணம் காட்டி போலீஸார் ஏற்க மறுத்துவிட்டனர். சட்டரீதியாக இது பெரும் தவறு. எனினும் யாரும் தட்டிக்கேட்க முடியவில்லை.
சிஐஎஸ்எப் படையினரையேகூட விடமாட்டோம் என்பதுபோல் போலீஸார் பேசினர். ஆனால் பலநூறு போலீஸார் குவிந்திருந்தனர். இது தவறில்லையா? மத்திய படையினர் வந்ததுதான் தவறு என்றும், 144 உத்தரவால் அதைமீறி எதையும் செய்ய முடியாது என்றும் தெரிவித்துவிட்டனர்.
இதனால் உறுதியாக தீபம் ஏற்றப்பட்டுவிடும் என்ற எங்களின் நம்பிக்கை தகர்ந்தது. அரசு மிக உறுதியாக இருந்து தீபம் ஏற்ற விடாமல் தடுத்துவிட்டது. இது மலைபோல் நம்பியிருந்த முருக பக்தர்களை வேதனையின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
தர்கா நிர்வாகமே அமைதி காக்கும்போது அரசு ஏன் இந்தளவுக்கு பிடிவாதமாக பக்தர்களுக்கு எதிராக செயல்படுகிறது என தெரியவில்லை.
இன்றைய மேல்முறையீட்டின்போது எங்கள் தரப்பு நியாயங்களை வாதமாக முன்வைப்போம். சட்டரீதியாக அனுமதி பெற்று தீபம் ஏற்றுவோம். அதை உடனே செய்வோம். அடுத்த ஆண்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.
நீதிமன்ற உத்தரவை இவ்வளவு அலட்சியமாக யாரும் கையாண்டதில்லை. பாஜக, இந்து முன்னணிக்கு எதிராக செயல் படுவதாகக் கூறி, முருக பக்தர்களை வேதனைப்படுத்தி விட்டனர். உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் இதை மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
அவர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பும் வகையில் மாநில அளவில் மிகப்பெரிய விழிப்புணர்வு மற்றும் போராட்டங்களை முன்னெடுப்போம். இன்றைய வழக்கின் உத்தரவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கார்த்திகை தீபத் திருநாளையொட்டி நேற்று மாலை திருப்பரங்குன்றம் மலை மீது உச்சிப் பிள்ளையார் கோயில் அருகேயுள்ள தீப மண்டபத்தில் வழக்கமாக ஏற்றப்படும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. | உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று இரவு திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து மலையை நோக்கி செல்ல முயன்றவர்களை போலீஸார் தடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. (அடுத்தபடம்) தள்ளு முள்ளுவில் காயமடைந்த காவலர். | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி |
கைது செய்து மிரட்டும் போலீஸார்: இதுகுறித்து இந்து முன்னணியினர் கூறுகையில், அமைதியாக போராடி னோம். ஆனால் ஏராளமான இந்து முன்னணியினர் மீது வழக்கு பதிந்தும், கைது செய்தும் மிரட்டும் பாணியில் போலீஸாரின் செயல்பாடு உள்ளது. போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
வலுக்கட்டாயமாக, இழுத்துச்சென்று பலரை கைது செய்துள்ளனர். இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம். மாநிலம் முழுவதும் இருந்து முருக பக்தர்களை திருப்பரங்குன்றத்தில் திரட்டி நியாயம் கேட்போம்’ என்றனர்.
தீபத்தூணில் தீபம் ஏற்றுவோம்: வழக்கு தொடர்ந்த ராம ரவிக்குமார் உறுதி - திருப்பரங்குன்றம் மலை உச்சி யில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த ராம ரவிக்குமார், அவரது வழக் கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு திருப்பரங் குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என 2 நாட்களுக்கு முன்பு உத்தர விட்டது.
ஆனால் அந்த உத்த ரவை கோயில் நிர்வாகமும், மாநகர காவல் துறையும் நிறைவேற்ற வில்லை. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதால் மத்திய தொழிலக பாதுகாப்புபடை யினரையும் கைது செய்வோம் என கூறு கிறார்கள்.
இந்த நாட்டில் இந்துக் களுக்கு வழிபாட்டு உரிமை கள் இல்லை. நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்ற மறுக் கிறது. இங்குள்ள இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. அரசுக்குத்தான் பிரச்சினை உள்ளது. ஓட்டு அரசியலுக்காக நீதிமன்ற உத்தரவை அரசு அவமதித்துள்ளது.
சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதால் இந்துக்கள் மலையில் தீபம் ஏற்ற முடியவில்லை. எங்களையும் மத்திய தொழிலக பாது காப்பு படை அதிகாரிகளையும் கைது செய்து விடுவோம் என கூறுகிறார்கள். இது திட்டமிட்ட சதி. இதனை சட்டத்தின்படி மீண்டும் எதிர் கொள்வோம். சத்தியமாக சொல்கிறேன், நிச்சயமாக சட்டத்தின்படி மலை உச்சியில் தீபம் ஏற்றுவோம். காத்திருந்து காத்திருந்து கால் வலித்ததுதான் மிச்சம். இவ்வாறு அவர்கள் கூறினார்.