சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே
மும்பை: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில், மகாராஷ்டிராவின் அகில்யா நகரில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நேற்று இரண்டு மணி நேரம் மவுன விரதம் மேற்கொண்டார்.
அகில்யா நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நேற்று காலை 11 மணிக்கு ஹசாரே தனது போராட்டத்தை தொடங்கினார். பிற்பகல் 1 மணிக்கு அவர் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டு அதே மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான ராலேகான் சித்திக்கு புறப்பட்டுச் சென்றார். மாணவர்கள் போராட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்னா ஹசாரே நேற்று முன்தினம் கடிதம் எழுதினார்.
அதில், “வன்முறை மற்றும் போலீஸ் நடவடிக்கை தொடர்பான செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன. அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதால் அரசு கவிழ்ந்து விடாது. மாறாக அரசின் செயல்பாட்டை மேலும் பொறுப்பு மிக்கதாகவும் திறமையானதாகவும் மாற்றும்.
போராட்டக்காரர்களின் கருத்துகளை அரசு பொறுமையுடன் கேட்க வேண்டும். நம்பிக்கையான சூழலை உருவாக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளை காண வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டார்.