அமராவதி: ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவை பிரிகிறார். இது குறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். கடந்த 2014-ல் ஜன சேனா கட்சியை நிறுவினார். அதற்கு முன்பு தனது சகோதரர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியிலும் அவர் பணியாற்றி இருந்தார். கடந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் அமர்ந்தது ஜன சேனா கட்சி. தற்போது ஆந்திராவின் துணை முதல்வராக பவன் கல்யாண் உள்ளார்.
இந்நிலையில், தனது மனைவி அன்னா லெஸ்னவாவை அவர் பிரிவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை கூட்டறிக்கை மூலம் பவன் கல்யாணும், அன்னாவும் பகிர்ந்துள்ளனர். இதன் மூலம் அவர்களது 13 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.
“எங்கள் வாழ்வின் குறிப்பிடத்தக்க பகுதியைப் பகிர்ந்து கொண்ட நிலையில் பரஸ்பர புரிதலுடன் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். எங்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்திருந்தாலும் நல்ல நண்பர்களாக தொடர விரும்புகிறோம். எங்களது பிள்ளைகளுக்கு அர்ப்பணிப்புள்ள பெற்றோராக இருக்க விரும்புகிறோம். இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இந்தப் பயணத்தில் எங்களுடன் இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பவன் கல்யாணும், அன்னாவும் கூறியுள்ளனர்.
கடந்த 2013-ல் ரஷ்யாவைச் சேர்ந்த அன்னாவை பவன் கல்யாண் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். ‘டீன் மார்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு நந்தினி மற்றும் நடிகை ரேணு தேசாய் ஆகியோரை பவன் கல்யாண் திருமணம் செய்து, பிறகு விவாகரத்து பெற்றுள்ளார்.