குப்பம்: ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் கடந்த 2 நாட்களாக திருப்பதி கங்கையம்மன் திருவிழா வெகு சிறப்பாக நடந்தது.
இதில் 2-ம் நாளான நேற்று காலை, சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதமாக அரசு சார்பில் அம்மனுக்குபட்டு வஸ்திரத்தை காணிக்கையாக சமர்ப்பித்தார். பின்னர் அவர் நேற்று மதியம் கார் மூலம் பெங்களூரு சென்று, அங்கிருந்து விஜய வாடாவிற்கு விமானம் மூலம் சென்றார். அப்போது குப்பம் பகுதியை அடுத்த தஞ்சம்ம கொட்டாலா எனும் இடத்தில் சாலை ஓரம் ஒரு வியாபாரி பனை நுங்குகளை விற்றுக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்து காரை நிறுத்தச் சொன்ன சந்திரபாபு நாயுடு, அக்கடைக்காரரிடம் சென்று தனக்கும், தனது மனைவி மற்றும் அங்கு உடன் இருந்தவர்களுக்கும் பனை நுங்கு தரும்படி கேட்டார். முதல்வரை பார்த்த மகிழ்ச்சியில் அந்த வியாபாரி பல நுங்குகளை வெட்டி முதல்வரிடம் வழங்கினார்.
அதனை ஆசையோடு சாப்பிட்டு, அதற்கான பணத்தை கொடுத்துவிட்டு, அந்த நுங்கு வியாபாரியிடம் நலம் விசாரித்து விட்டு புறப்பட்டுச் சென்றார் சந்திரபாபு நாயுடு. இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலை தளத்தில் பகிர்ந்துள்ளார்.