விஜயவாடா: ஆந்திர மாநிலம், இப்ரஹிம்பட்டினம் அருகே கிருஷ்ணா - கோதாவரி சங்கமிக்கும் இடத்தில் நேற்று புனித ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார்.
பின்னர் அங்கு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: “வரும் 2027, மார்ச் மாதத்திற்குள் போலவரம் அணையை திறந்து நாட்டுக்கு அர்ப்பணிப்போம். நாங்கள் ஆட்சிக்கு வந்த கடந்த 2 ஆண்டுகளில் நீர்வளத்துறையில் சிற்றணைகள், தடுப்பணைகளுக்காக ரூ.24 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளோம்
அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.35 ஆயிரம் கோடி செலவு செய்து, மேலும் 35 நீர்நிலை திட்டங்களை நிறைவு செய்வோம். பென்னா - வம்சதாரா நதிகள் இணைக்கப்பட்டால் ஆந்திர மாநிலத்தில் வறட்சி என்பதே ஏற்படாது. இதேபோன்று கங்கை, காவிரி நதிகளை இணைத்தால் நம் நாட்டுக்கே தண்ணீர் பிரச்சினை இருக்காது. நாட்டில் விவசாயமும் செழித்தோங்கும்.
குண்டூர் குடிநீர் கால்வாய் திட்டத்துக்கு இம்மாத இறுதியில் அடிக்கல் நாட்டப்படும். போலவரம் இடது கால்வாய் திட்டப்பணிகள் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 14ம் தேதி, அனகாபல்லியில் கோதாவரி நீருக்கு ஜல ஆரத்தி எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.