இந்தியா

3-வது குழந்தைக்கு ரூ.30,000; 4-வது குழந்தை பெற்றால் ரூ.40,000: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

என்.மகேஷ்குமார்

ஸ்ரீகாகுளம்: ‘‘நம்​முடைய பிள்​ளை​களே நமது சொத்​து. 3-வது குழந்தை பெற்​றால் ரூ.30 ஆயிரம், 4-வது குழந்தை பெற்​றுக் கொண்​டால் ரூ.40 ஆயிரம் அரசு சார்​பில் வழங்​கப்​படும்’’ என ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று அறி​வித்​தார்.

ஆந்​திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்​டத்​தில் நேற்று முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டார். அப்​போது அவர் நரசண்ண பேட்​டை​யில் ‘தூய்மை ஆந்​திரா - தங்க ஆந்​தி​ரா’ எனும் திட்​டத்​தில் பங்​கேற்​றார்.

இதில் சந்​திர​பாபு நாயுடு பேசுகை​யில், ‘‘ஏழ்மை இல்லா சமூகத்தை காண வேண்​டும் என்​பதே ஆசை. இந்த சமூகத்​தில் மாற்​றத்தை கொண்டு வந்​தால்​தான் அது சாத்​தி​யம். அதற்கு பொருளா​தா​ரம் இடம் கொடுக்க வேண்​டும். பொருளா​தா​ர வளர்ச்​சிக்கு முதலீடு என்​பது அவசி​யம். அந்த முதலீட்டை நம்​மிடம் வைக்க தொழில் நிறு​வனங்​கள் வர வேண்​டும். அப்​போது​தான் ஒரு மாநிலத்​தின் வளர்ச்சி பெரு​மடங்கு உயரும். இப்​போது ஆந்​தி​ரா​வில் தொழில் தொடங்க கூகுள் உட்பட பல நிறுவனங்கள் முன் வரு​கின்​றன. தெலுங்கு தேசம் தலை​மையி​லான கூட்​டணி ஆட்​சி​யில், கடந்த 23 மாதங்​களில் மட்​டும் ஆந்​தி​ரா​வில் ரூ. 23 லட்​சம் கோடி முதலீடு​கள் வந்​துள்​ளன. ஆந்​திர அரசு செய்து கொண்ட ஒப்​பந்​தத்​தின்​படி, 24 லட்​சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்​கும்.

இதன் மூலம் நமது அடுத்த தலை​முறை நன்​றாக சம்​பா​தித்து வளமான வாழ்க்​கையை வாழ்​வார்​கள். இனி வட ஆந்​தி​ரா​வில் இருந்து பிழைப்பு தேடி வெளி மாநிலங்​களுக்கு செல்ல வேண்​டிய​தில்​லை. பல நிறு​வனங்​கள் தொழில் தொடங்க வட ஆந்​தி​ராவை நோக்கி படை எடுக்​கின்​றன.

சொத்து: பிள்​ளை​கள்​தான் நமது சொத்​துக்​கள் என அந்த காலத்​தில் நம் முன்​னோர் சொன்​னார்​கள். ஆனால், நாம் ஒன்று அல்​லது இரண்டு பிள்​ளை​களு​டன் நிறுத்தி விட்​டோம். இப்​போது நான் சொல்​கிறேன். பிள்​ளை​கள்​தான் நமது சொத்​து. ஆதலால், பிள்​ளை​களை வளர்க்க பயப்பட வேண்​டாம்.

3-ம் குழந்தை பெற்​றால், ரூ.30 ஆயிரம், 4-வது குழந்தை பெற்​றுக் கொண்​டால் ரூ.40 ஆயிரம் அரசு சார்​பில் வழங்​கு​வேன். ஏற்​கெனவே ‘தாய்க்கு வந்​தனம்’ எனும் திட்​டத்​தின் கீழ் பிள்​ளை​களைப் பள்​ளிக்கு அனுப்​பும் தாய்​மார்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்த தொகையை மேலும் அதி​கரிக்க வேண்​டும் எனும் யோ​சனை​யும் எனக்கு உள்​ளது. இவ்​வாறு சந்​திர​பாபு ​நா​யுடு கூறி​னார்​.

SCROLL FOR NEXT