புதுடெல்லி: பண்டைய வங்க மொழியில் வைஷ்ணவ பக்திப் பாடல்கள், வைஷ்ணவ பதாவளி என்றழைக்கப் படுகின்றன. இவை தமிழின் நாலாயிர திவ்யப் பிரபந்த காலத்தில் எழுதப்பட்டவை. இந்த வைஷ்ணவ பதாவளியை, தமிழில் மொழி பெயர்க்க முயற்சிகள் நடக்கின்றன.
அதற்காக விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்துடன் இணைந்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி), கடந்த ஜுன் 19 தேசியப் பயிலரங்கத்தைத் தொடங்கியது. இது ஜூலை 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்பயிலரங்கின் சிறப்பு விருந்தினராக, டெல்லி பல்கலை இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுத் துறை பேராசிரியர் டாக்டர் டி.உமா தேவி பங்கேற்றார். விஸ்வ பாரதியின் மொழிகள், இலக்கியம் மற்றும் பண்பாட்டு நிறுவனம், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் சிஐசிடி இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் கூறுகையில், ‘‘வங்காள வைஷ்ணவ பக்தி இலக்கிய மரபின் முக்கிய அங்கமாக விளங்கும் சுமார் 1,200 பதாவளிப் பாடல்களைச் செம்மொழித் தமிழில் மொழி பெயர்க்கும் அரிய பணி இப்பயிலரங்கின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ் மற்றும் வங்க இலக்கிய மரபுகளை இம்மாபெரும் மொழி பெயர்ப்புப் பணி இணைக்கும்.
இது, இந்திய மொழிகளின் பரஸ்பரப் புரிதலையும் தேசிய ஒருமைப் பாட்டையும் வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி. சங்க இலக்கியங்கள் எட்டுத் தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களைப் பண்டைய வங்க மொழியில் மொழி பெயர்க்கும் பெரும் ஆய்வுத் திட்டத்தையும் தமிழ்த்துறை தற்போது செயல்படுத்தி வருகிறது" என்று தெரிவித்தார்.
விஸ்வ பாரதி பல்கலைக் கழகம் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்டது. இங்கு, தற்போது 18 துறைகளின் மூலம் 23 இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் கற்பித்தல் மற்றும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தின் தமிழ்த்துறை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழி, இலக்கியம், மொழிபெயர்ப்பு மற்றும் ஒப்பிலக்கிய ஆய்வுத் துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.