

உலகின் இளைய தொழிலாளர் வளத்தைக் கொண்டுள்ள இந்தியா, தனது மக்கள்தொகை பலனை பொருளாதார வளர்ச்சியாக மாற்ற வேண்டிய முக்கியமான கட்டத்தில் உள்ளது. இன்றைய வேலைவாய்ப்புச் சந்தையானது, வெறும் கல்விப் பட்டங்களை விடத் தொழில்சார் திறன்களுக்கே (Skills) அதிக முன்னுரிமை அளிக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், 2025-26 பொருளாதார ஆய்வறிக்கையும், 2026-27 மத்திய பட்ஜெட்டும் திறன் மேம்பாட்டைச் சமூக முன்னேற்றத்துக்கான முக்கியக் கருவியாக முன்வைத்துள்ளன. அனைவரையும் உள்ளடக்கிய தொழிலாளர் சந்தை மற்றும் பொருளாதார சமத்துவத்தை உருவாக்குவதில் திறன் மேம்பாட்டுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்பதை அரசின் தரவுகள் உணர்த்துகின்றன.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் பிப்ரவரி 2026 தரவுகளின்படி, நாட்டின் வேலைவாய்ப்பு பங்கேற்பு விகிதம் (LFPR) 55.9 சதவீதமாக நிலைத்திருக்கிறது. இதில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்திருப்பதும், வேலையின்மை விகிதம் குறைந்திருப்பதும் தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டுள்ள நேர்மறையான அறிகுறிகளாகும்.