புதுடெல்லி: காவல் துறையால் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான காலக்கெடு எப்போது தொடங்கும்? என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 4 நபர்களுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில், 4 பேரும் கைது செய்யப்படுவதற்கு முன்பு 18 மணி நேரம் சட்டவிரோதமாக போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் அதுல் எஸ்.சந்துர்கர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஒரு நபர் எப்போது காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறாரோ, அந்த கணத்தில் இருந்து 24 மணி நேரத்துக்குள் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்கான காலக்கெடு தொடங்குகிறது. அதாவது, ஒருவரை காலை 10 மணிக்கு தடுத்து வைத்துவிட்டு மாலை 6 மணிக்கு கைது செய்ததாக காவல் துறை பதிவு செய்தாலும் காலை 10 மணியிலிருந்து 24 மணி நேரம் கணக்கிடப்பட வேண்டும்.
மேலும், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது அவர் உண்மையில் எந்த நேரத்தில் தடுத்து வைக்கப்பட்டார் என்பதை நீதிபதி கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தடுத்து வைக்கப்பட்ட நபரை 24 மணி நேரத்துக்குள் நீதிபதி முன்பு ஆஜர் படுத்துவது கட்டாயம். முறைப்படியான கைது பதிவேட்டை சுட்டிக்காட்டி தாமதமாக ஆஜர்படுத்துவதை ஏற்க முடியாது. அதுபோல, 24 மணி நேரம் அவகாசம் உள்ளது என்பதற்காக ஒருவரை தேவையின்றி நீண்ட நேரம் தடுத்து வைத்திருக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.